சென்னை சைதாப்பேட்டை, எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத இடம். சைதாப்பேட்டை சுற்றுப்புற பகுதிகளில் பல புகழ் வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் இருக்கின்றன. அப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கோயில்தான் “திருக்காரணி அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர்’’ திருக்கோயிலாகும். மிக பெரிய ராஜகோபுரங்கள், அதன் உள்ளே சென்ற பிறகுதான் தெரிந்தது, காரணீஸ்வரர் கோயில் இன்னும் பிரம்மாண்டமான கோயில் என்று. ஒவ்வொரு சந்நதிகளிலும் உள்ள கோபுரங்கள், கறுங்கற்களால் ஆன சுற்று பிராகாரங்கள், கோயிலின் அமைப்பு ஆகியவைகளை பார்க்கும் போது, அதன் தொன்மை நமக்கு நன்கு விளங்கியது. இந்த காரணீஸ்வரரை முற்காலத்தில் இந்திரன் பூஜை செய்ததாக கூறப் படுகிறது. கோயில் குளத்திற்கு, இந்திர தீர்த்தம் என்று பெயர். ஏன் இந்திரன் காரணீஸ்வரரை பூஜிக்க வேண்டும்? ஏன் இங்குள்ள குளத்திற்கு இந்திரதீர்த்தம் என்று பெயர் வந்தது? போன்ற காரணீஸ்வரர் கோயிலின் மகிமைகளை அறியலாம்.
முனிவருக்கு கொடுத்த காமதேனு
முன்னொரு காலத்தில், முனிவர்களுக்கு அனைத்து தேவர்களும் மரியாதை கொடுத்து, அவர்கள் கூறுவதை கேட்டு நடக்க வேண்டும். கடவுளே ஆயினும் முனிவர்களின் சொல்லுக்கோ, கட்டளைகளுக்கோ செவி சாய்த்து அதன் படி நடக்க வேண்டும். காரணம், அவர் களின் தவவலிமை அத்தகையது. சுயநலமில்லாது, நாடும் நாட்டு மக்களும்நன்றாக இருக்க வேண்டும் என்று சதாசர்வ காலமும் யாகங்கள் செய்து, தங்களை நாட்டுக்காக அர்ப்பணித்தவர்கள்.இப்படி இருக்க, ஒரு நாள் தன்னிடம் இருந்த தெய்வப் பசுவாகிய காமதேனுவை, வசிஷ்டருக்கு ஒரு மண்டலகாலம் வரை வைத்திருக்க இந்திரன் கொடுத்தான். கொடுத்த காரணம், காமதேனு கேட்டதையெல்லாம் கொடும். ஆகையால் முனிவரும் பயனடையட்டும் என்ற நல்ல நோக்கில் வசிஷ்டருக்கு கொடுக்கிறான் இந்திரன். கொடுத்த கெடு காலம் முடிவடைந்துவிட்டது. இன்னும், காமதேனுவை வசிஷ்டர் கொடுத்தபாடில்லை. இதனால், இந்திரன் வேதனைப்பட்டான்.
முனிவர் இட்ட சாபம்
இதனைக் கண்ட மற்றொரு முனிகணங்களிலொருவர், இந்திரனை நோக்கி; “ஏ.. மன்னா, ஒரு நாள் காசி தலத்தில் உன் பசு வசிஷ்ட முனிவரின் பூஜைக்கு இடையூறாக இருந்திருக்கிறது. அதனால், கோபம் கொண்ட வசிஷ்டர், நீ காட்டு பசுவாக போகக் கடவாய் என்று சபித்துவிட்டார். அன்று முதல் அந்த பசு செய்வது தெரியாது காடுகளிலேயே சுற்றி சுற்றி வருகிறது’’ என்று சொன்னதும், வசிஷ்டருக்கு நன்மை செய்ய போய், அது தீமையில் முடிந்துவிட்டதே என இந்திரன் வருத்தமடைந்தான். “அந்த பசுவை மீண்டும் யான்பெற, ஏதேனும் உபாயம் (வழி) இருக்கிறதா?’’ என முனிவரை பார்த்துக் கேட்டான்.
பிரதிஷ்டை செய்த இந்திரன்
“ஒரே ஒரு வழியிருக்கிறது; நீங்கள் பூலோகம் செல்ல வேண்டும். அங்கு, தொண்டை மண்டலத்துள் திருமயிலை மாநகர எல்லைக்கும், திருவான்மியூர் எல்லைக்கும் நடுமத்தியில் மேற்கே சிலது கடிகை தூரத்தில் நீ சோலை ஒன்று உண்டாக்கி, அந்த சோலைக்குள் லிங்கம் ஒன்றினை பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தால், அச்சிவபிரான் அருளால், மீண்டும் காமதேனுவை பெறுவாய்’’ என முனிவர்கூற, உடனே இந்திரன் தன் வாகனமாகிய கார்யென்னும் மேகங்களை அழைத்து, முனிவர் கூறிய திருமயிலை மாநகர எல்லைக்கும், திருவான்மியூர் எல்லைக்கும் நடுமத்தியில் மேற்கே சிலது கடிகை தூரத்தில் மழை பொழிந்து அந்த இடத்தை செழிக்கவைக்க உத்தரவிட்டார்.அதன்படி, மழையானது அங்கு பொழிந்து அந்த இடத்தை செழிக்கவைத்தது. அதன் பின், அச்சோலைக்குள் தங்கி ஓர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அதற்கு மேற்புரத்தில் தடாகம் ஒன்றினை அமைத்து, காலம் தவறாது பூஜித்து வந்தான். வருடங்கள் ஓடோடின…
காட்சிக் கொடுத்த சிவபிரான்
இந்திரனின் பூஜையை கண்டு கருணை கூர்ந்த சிவபிரான், இந்திரனின் முன் தோன்றி, “என்னை பிரதிஷ்டை செய்து இதுநாள் வரை பூஜித்தனன் நோக்கம் என்ன? உனக்கு என்ன வரம் வேண்டும்?’’ என கேட்டார், சிவன்.“ஐயனே… என்னிடத்தில் இருந்த தெய்வப் பசுவாகிய காமதேனுவை…..’’ என்று தொடங்கி நடந்தவற்றை எல்லாம் சிவபெருமானிடம் இருகரங்களையும் கூப்பியவாறே கூறத்தொடங்கினான்.“இதனால்தான் நான் உங்களை பிரதிஷ்டை செய்து இதுநாள் வரை தொடர்ந்து பூஜித்து வருகிறேன்’’ என வருத்தத்துடன் தெரிவித்தார், இந்திரன்.“உன் பூஜையினால் நான் ஆனந்தம் கொண்டேன். நீ கூறியபடியே சாபத்தால் காட்டில் சுற்றித்திரியும் காட்டுப் பசுவை மீண்டும் தெய்வப் பசுவாக மீட்டுத் தருகிறேன்’’ என்று காட்டுப் பசுவாக மாறியிருந்த காமதேனுவை, ஒரு நொடியில் மீண்டும் காமதேனுவாக்கி இந்திரனிடம் ஒப்படைத்தார், சிவபெருமான். மேலும், “உன் கட்டளையினால் கரியமேகங்கள் சூழப்பட்டு, கார்வரிஷித்து (மழைபொழிந்து) இங்கு குளிர்ச்சியை செய்தபடியால் இத்திருத்தலத்திற்கு “காரணி’’ என பெயர் சூட்டுகிறேன்’’ என்று சொல்லி சிவபெருமான் மறைந்தார். இப்படியாக இத்தலத்தின் வரலாறு தெரிவிக்கிறது.
சாபங்கள் போக்க காரணீஸ்வரர்
மேலும், “கார்’’ என்றால் மேகம். மழை வேண்டி இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால், உடனே மழை பொழியும் என்பது கண்கூடான சான்று. இந்திரனின் தெய்வப் பசுவின் சாபத்தை விளக்கிய தலமானதால், தற்காலத்தில் மனிதர்களுக்குள்ளான பித்ரு சாபம், பெண் சாபம், சர்ப்ப சாபம், குலதெய்வ சாபம் போன்ற கடும் சாபத்தால் பாதிக்கப்பட்டோர், இத்திருத்தலத்தில் வேண்டி, விளக்கேற்றி அர்ச்சனை செய்தால் பாபங்கள் விலகி நன்மை பயக்கும் என்பது ஐதீகம்.
பிற சந்நதிகள்
இக்கோயிலில் வீற்றிருக்கும் வீரபத்திரஸ்வாமிக்கு, தொடர்ந்து 11 புதன் கிழமைகளில், வில்வ இலையுடன் செம்பருத்தி பூவையும் சேர்த்து மாலை சாற்றினால், வேலை இல்லாதவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கிறது. இது பக்தர்களின் அனுபவ உண்மை. மேலும், இங்குள்ள அனுமன் சந்நதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அனுமன் ஜெயந்தி அன்று காலை முதலே சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அனுமனை வழிபடுவார்கள். அதே போல், இக்கோயிலில் சனீஸ்வரர் தனிச் சந்நதிக் கொண்டு அருள்பாலிக்கிறார். இவருக்கு சனிக்கிழமை தோறும் விசேஷ அபிஷேகம் நடைபெறும். மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், ஆகம விதிப்படி வட்ட வடிவில் நவகிரக சந்நதி அமைந்திருக்கிறது.
விழாக்கள்
காரணீஸ்வரர் கோயிலில் ஆண்டு முழுவதிலும் ஏதோவொரு உற்சவங்கள் தொடர்ந்து நடைபெற்றே இருக்கும். அந்த வகையில்;
*சித்திரை மாதத்தன்று சித்திரை திருவிழா பத்து நாட்களும், வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
* வைகாசி மாதத்தில், இருபது நாட்கள் வசந்தோற்சவம் நடைபெறும். முதல் பத்து நாட்கள் சோமாஸ்கந்தருக்கும், வைகாசி விசாகம் அன்று, பஞ்சமூர்த்தி புறப்பாடும், சண்முகர் புறப்பாடும் நடைபெறும். மீதம் உள்ள பத்து நாட்கள், முருகப் பெருமானுக்கு வெவ்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு திருவீதி புறப்பாடு நடைபெறும்.
* ஆனி மாதத்தில் வரக்கூடிய ஆனி திருமஞ்சனம் அன்று, இக்கோயிலில் விசேஷ வழிபாடு நடைபெறும்.
v ஆடி மாதத்தில் வருகின்ற ஆடிபூரம் அன்று, ஐந்து நாட்கள் அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடைபெறும். மேலும், அம்பாள் திருவீதி புறப்பாடும் நடைபெறும்.
* ஆவணியில் வருகின்ற ஆவணி மூலம், ஆவணி பௌர்ணமி ஆகிய இரு நாட்களுமே இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
* புரட்டாசி மாதம், பௌர்ணமி அன்று “நிறைமணி காட்சி’’ மிக முக்கிய நிகழ்ச்சியாக நடைபெறும். அன்றைய தினத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
* ஐப்பசி மாதத்தில், பௌர்ணமியும் – அஸ்வினி நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில், “அன்னாபிஷேகம்’’ சிறப்பாக நடைபெறும். அதே போல், “கேதார கௌரி விரதம்’’ அன்று கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
* கார்த்திகை மாதத்தில் “திருக்கார்த்திகை’’ அன்று தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெறும். மேலும், ஐந்து சோமவாரமும் (திங்கள்) சோமாஸ்கந்தருக்கு விசேஷ பூஜையும், நான்காவது சோமவாரம் சங்காபிஷேகமும், ஐந்து மங்களவாரமும் (செவ்வாய்) பைரவஸ்வாமிக்கு அர்த்தஜாம பூஜையும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.
* மார்கழியில் வரக்கூடிய ஆருத்ரா மிக விமர்சையாக கொண்டாடப்படும்.
* தை மாதத்தில், தைபூசம் அன்று மூன்று நாட்கள் தெப்ப திருவிழா நடைபெறும்.
* மாசி மாதத்தில், மாசி மகம், தீர்த்தவாரி உற்சவம், மற்றும் ஸ்வாமிக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு வீதிஉலா ஆகியவை நடைபெறும்.
* பங்குனியில், பங்குனி உத்திரம் அன்று சீரும் சிறப்புமாக கொண்டாடப்படும்.
ஆக, 12 மாதங்களிலும் ஏதேனும் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்தான் இத்திருக்கோயிலில் மிக பிரம்மாண்டமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் தொடர்புக்கு: என்.சாந்தகுமார குருக்கள் – 9840250291.இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில், மிக சிறப்பாக செயல்பட்டு வரும் இத்திருக்கோயில், காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை வரையிலும் கோயிலானது திறந்திருக்கும்.