டெல்லி: கர்நாடக மக்களின் நலனை பாதுகாக்க இணைந்து செயல்படுவோம் என சித்தராமையா தெரிவித்துள்ளார். கடந்த 10ம் தேதி நடந்து முடிந்த, கர்நாடக மாநிலத் தேர்தலில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 135 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன், ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்று, காங்கிரஸ் உயிர்ப்புடன்தான் இருக்கிறது என்பதை அந்தக் கட்சியினர் நிரூபித்திருக்கின்றனர். இருப்பினும் முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது.
கடந்த ஒருவாரமாக நீடித்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இறுதியாக, கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக மக்களின் நலனை பாதுகாக்க இணைந்து செயல்படுவோம் என சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்தராமையா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கர்நாடகாவில் வெளிப்படையான, ஊழலற்ற, மக்களுக்கான ஆட்சியை காங்கிரஸ் கட்சி தரும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றும் சித்தராமையா உறுதி அளித்துள்ளார். இதனிடையே, இதுகுறித்து பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், கர்நாடக மக்களின் நலன் கருதி இணைந்து செயல்படுவோம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும்படி ராகுல் காந்தி அறிவுறுத்தினார். அனைத்தும் நன்றாகவே நடந்துள்ளது இனிவரும் காலங்களிலும் அனைத்தும் நன்றாகவே நடக்கும் என்றார்.