புதுடெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 117 வது கூட்டம் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நடாகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய நான்கு மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அதிகாரிகள், ஆர்.தயாளகுமார்( திருச்சி மண்டல தலைமை பொறியாளர்), காவிரி தொழில்நுட்ப தலைவர் ஆர்.சுப்ரமணியம் ஆகியோர் வைத்த கோரிக்கையில், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி ஜூன் மாதம் கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு 9.19 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் அதைவிட கூடுதலாக இதுவரையில் 16 டி.எம்.சிக்கும் அதிகமாக கர்நாடகா தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேப்போன்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ஜூலை மாதத்திற்கு தர வேண்டிய 31.24 டி.எம்.சி நீரை கர்நாடகா தடையின்றி திறந்து விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதேப்போன்று மற்ற மாநில பிரதிநிதிகளின் தரப்பிலும் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதையடுத்து அனைத்தையும் பதிவு செய்து கொண்ட ஒழுங்காற்று குழு தலைவர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ஜூலை மாதத்திற்கு தர வேண்டிய 31.24 டி.எம்.சி நீரை கர்நாடகா தடையின்றி திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டு கூட்டத்தை ஒத்திவைத்தார். இதைத்தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.