பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறப்பு வினாடிக்கு 8,200 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால் அங்குள்ள அணைகளில் நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி கோரிக்கைகள் வலுத்தன.
அதன்படி, கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறப்பு வினாடிக்கு 8,200 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு நேற்று காவிரியில் வினாடிக்கு 3,400 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 3,235 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,027 கனஅடியாக உள்ளது.
கபினி அணைக்கு வினாடிக்கு 4,366 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.