மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், நேற்று இரவு 8மணியளவில் வெளியேற்றப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி, முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனையடுத்து, நேற்று மாலை 6 மணியளவில், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 50,000 கனஅடியும் என மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர், காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 6 மணியளவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதேபோல், மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை, நேற்று முன்தினம் மாலை 6மணி அளவில் எட்டியது. அணையின் வரலாற்றில் 43வது முறையாக நிரம்பியதால், காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு கூடுதலாக வரும் தண்ணீர் முழுவதும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக காவிரியில் வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை 5 மணி நிலவரப்படி, 1.28 லட்சம் கனஅடி நீர், அரை வட்ட வடிவிலான 16 கண் மதகுகள் வழியாக, காவிரியில் திறந்து விடப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறுகிறது.
நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கனஅடி நீரும் என மொத்தம் 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று இரவு 7 மணி நிலவரப்படி நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கனஅடி, 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 1.48 லட்சம் கனஅடி என மொத்தம் 1.70 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு 8மணியளவில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக முகாம்களில் தஞ்சமடையவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* கல்லணையில் இருந்து 3,400 கனஅடி திறப்பு
மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் நொய்யல் வழியாக தவிட்டுப்பாளையம் காவிரி பாலத்துக்கு கடந்த 29ம்தேதி வந்து சேர்ந்தது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் அதிகாலை 2.30 மணி அளவில் மாயனூர் கதவணை வழியாக இந்த தண்ணீர் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு திருச்சி முக்கொம்பு அணையை வந்தடைந்தது. இதையடுத்து காலை 9 மணிக்கு கல்லணையை அடைந்தது. இந்நிலையில் கல்லணையிலிருந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், டி.ஆர்.பி.ராஜா, மெய்யநாதன் ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவினர். கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,500 கன அடி, வெண்ணாற்றில் 1000 கன அடி, கல்லணை கால்வாயில் 500 கன அடி, கொள்ளிடத்தில் 400 கன அடி என மொத்தம் 3,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதேசமயம் காவிரியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.