வேலூர்: ‘மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு ஆசை இருக்கலாம். ஆனால் உரிமையில்லை’ என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் கழிஞ்சூர் மற்றும் தாராபடவேடு ஏரிகளை தூர்வாரி செயற்கை தீவு, படகு சவாரி ஆகியவை ஏற்படுத்தி சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு ஆசை. ஆனால் அவர்களால் கட்ட முடியாது. அவர்களுக்கு ஆசை இருக்கலாம், ஆனால் உரிமையில்லை. அதேபோல் அவர்கள் அணை கட்டக்கூடாது எனக்கூறுவதற்கு நமக்கு உரிமை உண்டு.
அதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்புதான் காரணம்.மேகதாது அணையை கட்ட மத்திய நீர்வளத்துறை, சுற்றுச்சூழல், வனத்துறை உள்ளிட்டவற்றிடம் அனுமதி பெற வேண்டும். நோமென்ஷன் ஏரியாவில் பில்லிகுண்டு பகுதி வரை இயற்கையான முறையில் 80 டிஎம்சி தண்ணீர் வருகிறது. ஆனால் அந்த இடத்தில்தான் அணை கட்டுவோம் என கர்நாடகா சொல்வது உகந்தது அல்ல. அவர்கள் அரசியலுக்காக இதனையெல்லாம் சொல்வார்கள். ஆனால் இதனை நடக்கவிடமாட்டோம்.
பாலாற்றில் அரும்பருதி, சேண்பாக்கம், திருப்பாற்கடல் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குடும்ப தலைவிகளுக்கான மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை எதிர்க்கட்சிகள் தேவையின்றி குறை சொல்கிறார்கள். அவர்களுக்கு குறைசொல்வதுதான் வேலை. இவ்வாறு அவர் கூறினார்.
* அதிமுக ஆட்சியில் ரூ.1200 கோடி நஷ்டம் திமுக ஆட்சியில் ரூ.1600 கோடி லாபம்
துரைமுருகன் கூறுகையில், ‘கனிம வளத்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.1200 கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் நாங்கள் அந்த பிரச்னையை தீர்த்து வைத்து திமுக ஆட்சியில் ரூ.1600 கோடி அரசுக்கு லாபம் வரும்படி செய்துள்ளோம். அதிலிருந்து கனிம வளத்துறை எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பது தெரியும்’ என்றார்.