மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து 30 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்த கனமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இரு அணைகளுக்கும் வரும் நீரை பொறுத்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் 25 ஆயிரம் கனஅடி அளவிற்கு உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 8 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
இதேபோல் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று காலை 10,109 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 7815 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த 5 நாட்களாக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று காலை 113.37 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 112.85 அடியாக குறைந்தது. அணையின் நீர் இருப்பு 82.52 டிஎம்சியாக உள்ளது.
இதனிடையே கர்நாடகத்தின் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நேற்று பிற்பகல் முதல் 30 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் அம்மாநில காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அணைக்கு நீர்வரத்து 20315 கனஅடியாக குறைந்த நிலையில், நீர்திறப்பும் 18,300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இரு அணைகளில் இருந்தும் 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலைக்குள் ஒகேனக்கல்லை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரியில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்ககூடும். இதன் காரணமாக தான், இன்று காலை நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக இருந்த போதும் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வரும் நாட்களில் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது. அதனை எதிர்நோக்கியே பாசனத்திற்கு நீர்திறப்பும் 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.