பெங்களூரு: கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கங்கள், சம்பள உயர்வு கோரி வருகிற 1-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சம்பள உயர்வு மட்டுமின்றி கடந்த 2020-ம் ஆண்டு நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள ஊழியர்களின் சம்பள பாக்கியை உடனடியாக தர வேண்டும் என்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றுமாறு கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கங்கள் அரசை கேட்டுள்ளனர்.
இந்த கோரிக்கைகள் குறித்து ஏற்கனவே கர்நாடக அரசுடன், போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் போக்குவரத்து ஊழியர்கள் நூதன முறையில் வருகிற 1-ந்தேதி முதல் தங்களின் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
அதாவது இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அரசு பஸ்களில் பயணிக்கும் ஆண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கி நூதன முறையில் தங்களின் போராட்டத்தை நடத்த போக்குவரத்து கழக ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் தங்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காவிட்டால், இந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் 4 ஆயிரம் ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என்று ஊழியர்கள் சங்க தலைவர் விஜயகுமார் கூறியுள்ளார். மேலும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.