பெங்களூரு: கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் கர்நாடகா அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என துணை முதல்வர் டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநில அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. விதான் சவுதாவில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் குமாரசாமி, பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தகவுடா, முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகள், பெங்களூரு எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட எம்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மேகதாது அணை, காவிரி பிரச்னை குறித்து கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசினார். அப்போது பேசிய அவர், கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் கர்நாடகா அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காங்கிரஸ் அரசு பாதுகாக்கும். காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில அரசின் உரிமையை காக்க சட்டப் போராட்டம் தொடரும். அனைத்துக் கட்சித் தலைவர்கள் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.