பெங்களூரு: கர்நாடக அமைச்சர் சிவானந்த பாட்டீல் ரூ.500 நோட்டு மழையில் நனைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா காங்கிரஸ் தலைவர் அயாஸ் கான் மகனின் திருமண விழாவில் கர்நாடக அமைச்சர் சிவானந்த பாட்டீல் கலந்துகொண்டார். அப்போது, அவர் அமர்ந்திருந்த சோஃபா கரன்சி நோட்டுகளால் சூழப்பட்டிருந்தது. அது போதாதென்று, அங்கிருந்த ஒரு நபர், ரூ.500 நோட்டுகளை தூக்கி எறிந்தார். பணத்தில் அட்சதை போடுவதை போல அவர் ரூ.500 நோட்டுகளை காற்றில் பறக்கவிட்டார். அமைச்சர் சிவானந்த பாட்டீல் அமர்ந்திருந்த சோஃபாவை சுற்றி ரூ.500 நோட்டுகள் இருந்தது மட்டுமல்லாது, அவரது காலுக்கு கீழும் நோட்டுகள் கிடந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘கர்நாடக அமைச்சர்கள் மக்களின் பணத்தை கொள்ளையடித்து எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதற்கு அமைச்சர் சிவானந்த பாட்டீலின் வீடியோவே சான்று’ என்று கர்நாடக பாஜ டிவிட் செய்து விமர்சித்துள்ளது.