பெங்களூரு: டி.கே.சிவகுமார் மீது சிபிஐ பதிவு செய்த சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த கர்நாடக உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடித்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான டி.கே.சிவகுமார். பாஜ ஆட்சி இருந்தபோது இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.74 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்கள் சிக்கின.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்துவந்த நிலையில், 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. டி.கே.சிவகுமார் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்தது சிபிஐ. இந்த விசாரணைக்கு எதிராக டி.கே.சிவகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதற்கிடையே, தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கே.நடராஜன், சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரிய டி.கே.சிவகுமாரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், ஏற்கனவே சிபிஐ விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையையும் நீக்கினார். மேலும் டி.கே.சிவகுமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடித்து, இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.