பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா ஹுப்பள்ளி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘மாநில அரசியல் வரலாற்றில் பாரதிய ஜனதா கட்சி, மக்கள் ஆதரவுடன் சொந்த பலத்தில் ஆட்சி அமைத்ததில்லை. ஆபரேஷன் தாமரை மூலம் பிற கட்சி எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கி, அதன் மூலம் தான் அதிகாரத்தை இரண்டு முறை அனுபவித்துள்ளது. மூன்றாவது முறையும் ஆபரேஷன் தாமரை மூலம் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில் எங்கள் கட்சி எம்எல்ஏவாக இருக்கும் ரவிகுமார் கனிகாவிடம் ரூ.100 கோடி வரை பேரம் பேசியுள்ளனர். ரூ.100 கோடி என்ன ரூ.500 கோடி கொடுத்தாலும் எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் விலை போகமாட்டார்கள். பாஜ மற்றும் மஜதவினர் எனக்கு எதிராக மட்டுமில்லாமல், எனது தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அந்த கட்சி தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது’ என்றார்.