பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பெரும்பான்மையான அமைச்சர்கள் கட்சி எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை ஊதாசினப்படுத்தி வருவதாக 20க்கும் மேற்பட்ட மூத்த எம்எல்ஏக்கள் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். சித்தராமையா தலைமையிலான அரசு கடந்த மே 20ம் தேதி பொறுப்பேற்றது. அவருடன் துணைமுதல்வராக டி.கே.சிவகுமார் மேலும் 8 பேர் பதவியேற்றனர். அதை தொடர்ந்து மே 27ம் தேதி இரண்டாவது கட்ட அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது. இதில் 24 பேர் பதவியேற்றனர். அதன் மூலம் சித்தராமையா அரசில் முழு அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் ஆர்.வி.தேஷ்பாண்டே, வினய்குல்கர்னி, பி.ஆர்.பாட்டீல், எம்.கிருஷ்ணப்பா உள்பட பலருக்கு வாய்ப்பு வழங்காமல் தவிர்த்ததால், முதல்வர் மீது மட்டுமில்லாமல், கட்சி தலைமை மீதும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர்கள் சிலர் கட்சி எம்எல்ஏக்கள் கொடுக்கும் சிபாரிசுகளுக்கு செவி சாய்க்காமல் அலட்சியம் செய்து வருவதாக அதிருப்தியில் இருந்தனர். மக்களவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், கட்சி எம்எல்ஏக்களை அலட்சியம் செய்வதால், தேர்தலில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும் அமைச்சர்கள் அலட்சியப்படுத்துவதாக விரக்தியை வெளிப்படுத்தி வந்தனர்.
இதற்கிடையில் முதல்வர் சித்தராமையாவுக்கு மூத்த எம்எல்ஏக்கள் கடிதம் எழுத முடிவு செய்தனர். அதன்படி பி.ஆர்.பாட்டீல், ஆர்.வி.தேஷ்பாண்டே, எம்.கிருஷ்ணப்பா, பிரியகிருஷ்ணா, அல்லம்மா பிரபு பாட்டீல், விஜயானாந்த காஷப்பண்ணனவர் உள்பட 20 பேர் கையெழுத்து போட்டு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் சில அமைச்சர்களின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளதாக தெரியவருகிறது. ஆட்சி அமைந்த இரண்டு மாதங்களில் கட்சி எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்திருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
* நாளை எம்எல்ஏக்கள் கூட்டம்
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை காங்கிரஸ் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடக்கிறது. காங்கிரஸ் ஆட்சியை கலைக்க சிங்கப்பூரில் சதி நடந்து வருவதாக துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் பரபரப்பாக கூறியது. கட்சி அமைச்சர்களுக்கு எதிராக மூத்த எம்எல்ஏக்கள் கடிதம் எழுதி இருப்பது உள்ளிட்ட பல குழப்பங்கள் இடையில் நாளை நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கார-சாரமான விவாதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.