புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகா அரசு அதிகாரிகள் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நீரை திறக்க மறுத்தும், அதேப்போன்று மிரட்டும் தொனியில் பேசியதாலும் தமிழ்நாட்டு அதிகாரிகள் கூட்டத்தை புறக்கனித்து வெளிநடப்பு செய்தனர். டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம் அதன் தலைமை அலுவலகத்தில், ஆணையத்தின் தலைவர் ஹல்தார் தலைமையில் நேற்று நடந்தது. அதில் தமிழகம், கேரளா, கர்நாடகா புதுவை ஆகிய நான்கு மாநிலத்தின் தரப்பில் ஆணைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு சார்பாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்ப தலைவர் ஆர்.சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நீரில் 37.9 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா அரசு நிலுவையில் வைத்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் மட்டுமில்லாமல் மாநிலத்தில் இருக்கும் ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிப்படைந்து வருகின்றனர் என ஆலோசனை கூட்டத்தின் போது வலியுறுத்தி பேசினார். இதற்கு கர்நாடகா அரசு அதிகாரிகள் தரப்பில், ‘‘மாநிலத்தின் பெய்யும் மழையின் அளவை அடிப்படையாகக் கொண்டு காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இருப்பினும் தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை நீரை தற்போது தர முடியாது. அதேப்போன்று இந்த விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கவும் முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவிரி ஆணைய கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு அதிகாரிகள் அங்கிருந்து வெளிநடப்பு செய்து விட்டனர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறியதில், ‘‘நடந்த காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 37.9 டி.எம்.சி நிலுவை நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என தெரிவித்தோம். மேலும் இதுகுறித்து ஆணைய தலைவரிடமும் வலியுறுத்தினோம். ஆனால் எங்களது கோரிக்கையை கர்நாடகா அரசு அதிகாரிகள் நிராகரித்தது மட்டுமில்லாமல், மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார்கள். மேலும் தமிழ்நாட்டு விவசாயிகளின் கோரிக்கையை கர்நாடகா அரசு கருத்தில் கொள்ளவில்லை. அதனால் இந்த விவகாரத்தில் எந்தவித முடிவும் எட்டப்படாத சூழல் நிலவியதால் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அனைவரும் கூட்டத்தை புறக்கணித்து உள்ளிருந்து வெளியில் வந்து விட்டோம். இதையடுத்து இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக சந்திக்கும் நோக்கத்தில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் கர்நாடகா சார்பில் வழக்கம் போல் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு 15,000 கன அடி அல்ல 8,000 கன அடி மட்டும் தான் அதுவும் ஆகஸ்ட் 22 வரையில் தான் தர முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் இருக்கிற நான்கு அணைகளையும் சேர்த்து மொத்த கொள்ளளவான 114.571 டி.எம்.சி.யில் 93.535 டி.எம்.சி. தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் உள்ளம் நமக்கு. பயிர்கள் காய்ந்தாலும் கவலை இல்லை என்ற உள்ளம் கர்நாடகத்திற்கு. எனவே, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் போவதைத் தவிர வேறு வழியில்லை. விரைவில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நீதி வென்று, நீரை பெற்று தருவோம் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி உறுதியாக இருக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* தண்ணீர் திறக்க உத்தரவு
கூட்டத்தின் முடிவில் காவிரி ஆணையத்தின் தலைவர் பிறப்பித்த உத்தரவில்,’காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிலுவை நீரை கர்நாடகா உடனடியாக திறந்து விட வேண்டும். அதில் முதல் கட்டமாக கர்நாடகா மாநிலத்தின் மழையின் அளவை அம்மாநில அரசு கணக்கிட்டு அதன் அடிப்படையில் நிலுவை நீரின் ஒரு பகுதியை மிகவும் அவசரமாக விநாடிக்கு பத்தாயிரம் கன அடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டும். இது அம்மாநில விவசாயிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.