டெல்லி: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்துடன் கர்நாடக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்து பேசியது. காவிரியில் தமிழ்நாட்டிற்கு வரும் 27-ம் தேதி வரை நாள்தோறும் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடப்பட்டது. ஆனால், தங்களிடம் போதுமான நீர் இல்லை என்று கூறும் கர்நாடகா, காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதே போன்று, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்நாடகாவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதனிடையே அரசுமுறை பயணமாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா மற்றும் அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் ஆகியோர் டெல்லி வந்துள்ளனர். அவர்கள், கர்நாடகா மாநிலத்தின் அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்தை நேற்று டெல்லியில் நடத்தினார்கள். இதையடுத்து அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக ஒருசில தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் உடன் கர்நாடக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்து பேசியது.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க நிர்பந்திக்கக் கூடாது என முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழு வலியுறுத்தியது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க இந்த குழு திட்டமிட்டுள்ளது.