விஜயநகரா: கர்நாடகாவின் துங்கபத்ரா அணை மதகில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. கர்நாடகா மாநிலம் விஜயநகரா மாவட்டம் ஹோசபேட்டை அருகே அமைந்துள்ள துங்கபத்ரா அணையின் 19ம் எண் கதவு நேற்று காலை உடைந்து அதன் வழியே அணையிலிருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் 19வது கதவின் சங்கிலி இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, அணையிலிருந்து விநாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேறுவதால் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் நீர் வரத்து எப்போது வேண்டுமானாலும் விநாடிக்கு 3 லட்சம் கன அடியை எட்டும் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக, கரையோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கோப்பல், விஜயநகரா, பெல்லாரி, ராய்ச்சூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 33 மதகுகளும் திறக்கப்பட்டு அவற்றின் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உடைந்துள்ள கதவினை சரிசெய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அதிகளவு தண்ணீர் வெளியேறுவதால் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.