கிருஷ்ணகிரி, நவ.7: கிருஷ்ணகிரி அருகே கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 1.1 டன் ரேஷன் அரிசியை, காருடன் பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்ஐ திபாகர் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி- மகாராஜகடை சாலையில் உள்ள போத்திநாயனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் தலா 50 கிலோ அளவிலான 22 மூட்டைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது. விசாரணையில், அரிசியை மேல்சோமார்பேட்டை, லைன்கொல்லை, தேவசமுத்திரம் பகுதியில் குறைந்த விலைக்கு வாங்கி, கர்நாடகா மாநிலம் தொப்பனப்பள்ளியில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்திச் சென்றது தெரிந்தது. இதையடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியை சேர்ந்த ரமேஷ்(31), காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் ஐயன்பாளையம் நாகராஜ்(28) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், காருடன் ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கர்நாடகா மாநிலம் தொப்பனப்பள்ளியை சேர்ந்த சந்திரப்பா என்பவரை தேடி வருகின்றனர்.