புதுடெல்லி: கர்நாடகாவில் 48 எம்எல்ஏக்களை பாலியல் வழக்கில் சிக்க வைக்கும் முயற்சி தொடர்பான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 21ம் தேதி கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா பேசும்போது, ‘சில எம்எல்ஏ-க்கள் தங்களது அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்காக அழகிகளை வைத்து பாலியல் வழக்கில் சிக்க வைக்க முயற்சிக்கின்றனர். என்னையும் ஹனி டிராப்பில் சிக்க வைக்க சதி செய்தனர். என்னைப் போல 48 எம்எல்ஏக்களை குறிவைத்து ஹனி டிராப் சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதவிர நீதிபதிகள், காவல் துறை உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரையும் குறிவைத்து இந்த சதி நடந்துள்ளது. எனவே அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ என்றார். இந்த விவகாரத்தை விசாரிக்க வலியுறுத்தி பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ-க்கள் 18 பேர் அடுத்த 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பினய் குமார் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்கள் ஹனி டிராப் செய்யப்படுவதாக கர்நாடக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அரசை கோரியுள்ளனர்.
இந்த விவகாரத்தால் ஆட்சிக் கும் பாதிப்பு ஏற்படும் என கூறியுள்ளனர். எனவே ஹனி டிராப்பின் தீவிரத்தை உணர்ந்து, உச்ச நீதிமன்றம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என கோரினார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்னிலையில் மனுதாரர் பினய் குமார் சிங் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பருண் குமார் சிங், ‘இந்த விவாகரத்தால் கர்நாடகாவில் 18 எம்எல்ஏக்கள் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்து, இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்’ என வலியுறுத்தினார். இந்நிலையில் இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘ஹனி டிராப் ெதாடர்பான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஹனி ட்ராப்பில் சிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படும் நபர்கள், அவர்கள் தங்களது பிரச்னையை அவர்களே கவனித்துக்கொள்வார்கள். இதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்’ என்று மனுதாரரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மேற்கண்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.