Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கர்நாடகாவில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடகா: கர்நாடகாவில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். லாரி உரிமையாளர்கள் – கர்நாடக அரசு அதிகாரிகள் இடையே நடந்த பேச்சில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.

லாரிகளுக்கு எரிபொருளான டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடிகளில் லாரி ஓட்டுநர்கள் துன்புறுத்தல் போன்ற பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியில் இருந்து லாரிகளின் இயக்கத்தை நிறுத்திவைத்து 129 லாரி சங்கங்களை உள்ளடக்கிய கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு வேலை நிறுத்தம் அறிவித்தது.

இந்தப் போராட்டத்தில் உள்மாநிலத்துக்குள்ளேயும், வெளிமாநிலங்களுக்கும் இயக்கப்படும் 6 லட்சம் லாரிகள் பங்கேற்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காய்கறி, உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டது.

இதனிடையே, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கத்தின் கூட்டமைப்புத் தலைவர் ஜி.சண்முகப்பா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதாகவும், முதலில் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்த முதல்கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், முதல்வர் சித்தராமையா இரண்டாம்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்தப் பேச்சுவார்த்தையிலும் சமரசம் ஏற்படவில்லை.

தொடர்ந்து, கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் மீண்டும் இன்று முதல்வர் சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.