ஓசூர், நவ.11: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஓசூரில் பட்டாசுகள் வாங்க கர்நாடக மாநில மக்கள் குவிந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில், கடந்த மாதம் 7ம் தேதி நடந்த பட்டாசு வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அம்மாநில அதிகாரிகள் பட்டாசு கடைகளில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என தீவிர சோதனை மேற்கொண்டு, விதிமுறை மீறிய கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால், அத்திப்பள்ளியில் பட்டாசு கடைகள் செயல்படவில்லை.
இதனால் அம்மாநில மக்கள், பட்டாசுகளை வாங்க தமிழக எல்லையான ஓசூர் பகுதிக்கு தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.நாளை தீபாவளி பண்டிகை என்பதால், தமிழக எல்லையான ஓசூர் பகுதியில் பட்டாசுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. ஓசூர் மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தில் இருந்தும், பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து விதவிதமான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர். இதனால் கடந்த 2 நாட்களாக சிப்காட் பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு கடைகளில், மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த சிப்காட் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பட்டாசு விற்பனை களை கட்டி உள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.