பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2019 செப்டம்பரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், 2019 அக்டோபரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மூன்று வருட விசாரணைக்குப் பிறகு, அமலாக்கத் துறை வழக்கில் 2022 மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
2020 அக்டோபரில், சி.பி.ஐ, சிவகுமாருடன் தொடர்புடைய சுமார் 70 இடங்களில் 2017-ல் நடத்தப்பட்ட வருமான வரித் துறையின் சோதனைகளின் அடிப்படையில், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலை ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற வைக்கும் முயற்சியில், குஜராத்தின் 42 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பது தொடர்பாக பெங்களூரு அருகே உள்ள ரிசார்ட்டுக்கு சிவகுமார் சென்றிருந்த நேரத்தில், இந்த சோதனை நடத்தப்பட்டது.
2013 ஏப்ரல் முதல் 2018 ஏப்ரல் வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் சிவகுமார் எரிசக்தி அமைச்சராக இருந்தபோது, கணக்கில் வராத ரூ.74.93 கோடி மதிப்பிலான சொத்துகளின ஆவணங்கள் உள்ளதாக சி.பி.ஐ குற்றம் சாட்டியது. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்திய நிலையில், 2020-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் டி.கே.சிவகுமார் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார்மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கே.நடராஜன் 2020 முதல் சி.பி.ஐ விசாரித்து வரும் ரூ.74 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி இடைக்கால தடை விதித்தது.
இதனை தொடர்ந்து டி.கே.சிவகுமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்யபட்டது. இதனை விசாரித்த நீதிபதி சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்ததோடு, வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையையும் நீக்கி உத்தரவிட்டது. தொடர்ந்து டி.கே. சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை முடித்து இறுது அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.