மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 22,469 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், 2வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கபினி அணை நிரம்பும் நிலையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி காவிரியில் கடந்த 18ம் தேதி முதல் 25,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அதேபோல், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1201 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இதனிடையே, கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், தர்மபுரி மாவட்ட எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரிக்கு வந்தடைந்தது. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 19 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், மெயினருவி மற்றும் சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி, ஒகேனக்கல் காவிரியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை நேற்று 2வது நாளாக நீட்டிக்கப்பட்டது.
கபினியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் காலை, விநாடிக்கு 8,218 கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து, நேற்று மாலை 22,469 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை காட்டிலும், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு உயரத் தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் காலை 113.57 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று மாலை 113.81 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 83.94 டி.எம்.சி. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியதால், காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.