பெங்களூரு: காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிடபட்டிருந்தது. ஏற்கனவே கர்நாடக தரப்பில் அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளதாக கர்நாடக தரப்பு கூறிவந்தது. இந்த நிலையில் தான் நேற்று மீண்டும் 15 நாட்களுக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து கர்நாடகா என்ன மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நேற்று கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் முதல்வர் சித்தராமையா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து இன்று அனைத்து கட்சி கூட்டம் கூட்டபட்டது. இந்த கூட்டத்தில் பாஜக தரப்பில் பெங்களூரு நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி,மோகன், மைசூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பிரதாப் ஷிமா ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கபட்டது. முக்கியமாக கர்நாடகாவின் நீர் தேவை எவ்வளவு என்பது குறித்து விவாதிக்கபட்டது. அந்தவகையில் கர்நாடகாவிற்கு 106 டிஎம்சி தண்ணீர் தேவைபடும் நிலையில், தற்போது 53 டிஎம்சி தண்ணீர் மட்டுமே அணைகளில் இருப்பு உள்ளதாக விவாதிக்கபட்டது.
அது மட்டுமின்றி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த அண்டு மழை மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாகவே இந்த சூழல் உருவாகியுள்ளதாகவும், இதனை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் எடுத்துறைக்க வேண்டும் என்றும் விவாதிக்கபட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு தற்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது. இங்குள்ள சூழலை கட்டாயம் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தொழில் நுட்ப குழுவும் நேரடியாக வந்து ஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்க உள்ளதாக அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக ஒரு முடிவு செய்யபட்டுள்ளது.