பெங்களூரு: கன்னட மொழி பற்றி பேசிய கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகளிடமிருந்து வலியுறுத்தல்கள் வலுக்க, அதுதொடர்பாக கடந்த வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்திய கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கமல்ஹாசன் மே 30ம் தேதிக்குள் (நேற்று) பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவில்லை எனில், அவரது தக் லைப் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தது.
ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க திட்டவட்டமாக மறுத்துவிட்டார். தான் தவறாக எதுவும் கூறவில்லை என்றும், அன்பு மன்னிப்பு கேட்காது என்றும் கூறியிருந்த கமல்ஹாசன், தவறு செய்யாமல் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்நிலையில் தக் லைப் திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று பேசிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் பிரதிநிதி கோவிந்து, கன்னட மக்களின் மனதை காயப்படுத்தியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. அதனால் கர்நாடக ரக்ஷன வேதிகே என்ன சொல்கிறதோ அதைக் கேட்டுத்தான் நாங்கள் செயல்பட வேண்டும். எனவே கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதிக்கப்படுகிறது என்றார்.