ஓசூர்: கர்நாடக மாநிலம் பெங்களூர் புறநகர் ஆனேக்கல் தாலுகாவில் இக்களூர் என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் மனு (30). இவரது மனைவி ஹர்ஷிதா (25). தம்பதிக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது. கர்ப்பிணியான ஹர்ஷிதாவிற்கு, ஆறரை மாதத்தில் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. ஆறரை மாதத்தில் குழந்தை பிறந்ததால் இன்குபேட்டரில் வைத்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பூரண குணமடைந்த நிலையில், கடந்த வாரம் வீட்டிற்கு தாயும், சேயும் வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஹர்ஷிதா, கழிவறைக்கு சென்று விட்டு, மீண்டும் வந்தபோது தொட்டிலில் இருந்த குழந்தையை காணாததால் அதிர்ச்சியடைந்தார். பதற்றமடைந்த அவர் எங்கு தேடியும் குழந்தையை காணவில்லை. கணவருக்கு தகவல் கூறினார். பின்னர் இருவரும் ஆனேக்கல் சூரியா நகர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து தேடினர். பின்னர் மொட்ைட மாடியில் ஆய்வு செய்தனர். அங்குள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது குழந்தை மூழ்கியபடி கிடந்தது. பெண் சிசுவை சடலமாக போலீசார் மீட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கலப்பு திருமண தகராறு காரணமாக குழந்தையை நீரில் மூழ்கடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. பின்னர் சடலத்தை கைப்பற்றி ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சூர்யநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கு பிறகே தொட்டிலில் கிடந்த குழந்தையை தொட்டியில் வீசி கொன்றது யார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.