கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பன்பாக்கம் கிராமத்தில் கரியமாணிக்க வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்வுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, ஹோமம், பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், சுமங்கலி பூஜை, கோ பூஜை, கன்னியா பூஜை, ஆகியவை நடைபெற்றன. இதனை தொடர்ந்து, மகா அபிஷேகம் சாந்தி அபிஷேகம், சிலைகள் கண் திறத்தல், சிலை படிய வைத்தல், அஸ்டபந்தனம் சமர்ப்பித்தல் ஆகியவை நடைபெற்றது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை விஸ்வரூப தரிசனம், கோ தரிசனம், 108 திரவியங்களால் மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து புரோகிதர்கள் வேத மந்திரம் முழுங்க ஆலய கோபுரத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து வெங்கடேச பெருமாளுக்கு மகா அலங்காரம், சிறப்பு அர்ச்சனை, தீபாரதனை நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் ஒன்றிய செயலாளர் கி.வை.ஆனந்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.