சங்கரன்கோவில்: கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆவணி தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் துணை கோயில் ஆகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி தபசு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
14 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் அம்பாள் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருவது பழக்கம். இந்த ஆண்டுக்கான ஆவணி தபசு திருவிழா நேற்று காலை 7.52 மணிக்கு அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. பூஜைகளை ராஜா பட்டர் தலைமையிலான பட்டர்கள் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் கொடியேற்ற மண்டகப்படிதாரர் பேச்சியப்பன் குடும்பத்தினர், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா, அறங்காவலர் முப்பிடாதி, கரிவலம் சண்முகவேல், பஞ். தலைவர் மாரியப்பன், பழனிவேல்ராஜன், புலியூரான், கணபதி, சுந்தர், வக்கீல் முனியசாமி, வேல்முருகன், நவநீதகிருஷ்ணன், ராமசாமி மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 11ம் திருநாளான வரும் 10ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான ஆவணித்தபசு திருவிழா 13ம் திருநாளான வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.