காரைக்குடி: காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலமாக, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக துவக்கி வைத்தார். காரைக்குடி மாநகராட்சிக்கான அரசாணையை முதல்வர் முக ஸ்டாலின், காரைக்குடி மாமன்றதலைவர் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரனிடம் வழங்கி தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாநகராட்சியாக காரைக்குடி உருவாகி உள்ளது.
தற்போது 36 வார்டுகளைக் கொண்ட காரைக்குடியில், சுமார் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆண்டு வருமானம் ரூ.37.10 கோடியாக உள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், நகராட்சியின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள சங்கராபுரம், இலுப்பக்குடி, அரியக்குடி, கோவிலூர், தளக்காவூர் (மானகிரி) ஆகிய 5 ஊராட்சிகள் மற்றும் கோட்டையூர், கண்டனூர் ஆகிய 2 பேரூராட்சிகள் என மொத்தம் ஏழு உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்படும். இதனால் மக்கள் தொகை 2.45 லட்சமாக உயரும். மேலும் ஆண்டு வருமானம் ரூ 65.61 கோடியாகவும் உயர வாய்ப்புள்ளது. காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததை தொடர்ந்து ஆணையர் வீரமுத்துக்குமார் தலைமையில் பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இது குறித்து மாமன்றதலைவர் முத்துத்துரை கூறுகையில், காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாக தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன்.நேரு, முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் ஆகியோருக்கு நகாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.