காரைக்கால்: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி காரைக்காலில் விதவிதமாக பல அடி உயரத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விநாயகர் சதுர்த்தி திருவிழா நாடு முழுவதும் வருகின்ற 18ம் தேதி கோலாகலமாக கொண்டாட பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலை விற்பனை இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் காரைக்காலில் சிங்கம், அன்னம், மயில், நந்தி, யானை உள்ளிட்ட வடிவங்களில் பல அடி உயரத்தில் விநாயகர் சிலைகள் விதவிதமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. 4 ஆண்டிற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட முருகனை அனைத்தவாறு இருக்கும் விநாயகர் சிலைகள் அதிகம் விரும்பி வாங்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 3 மாதமாக 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதால் விநாயகர் சிலையை காணவும், சிலையை வாங்கி செல்லவும் ஏராளமானோர் நிரவி பகுதிக்கு செல்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருவாரூர், முத்துப்பேட்டை, தஞ்சாவூர், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.c