Monday, September 9, 2024
Home » காராகிரகம் எனும் பந்தன தோஷம்

காராகிரகம் எனும் பந்தன தோஷம்

by Nithya

இவ்வுலகில் பிறந்த எல்லோருக்கும் சுதந்திரம் என்பது உரிமை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தச் சுதந்திரம் ஏதோ ஒரு காரணத்தினால் பறிக்கப்படுவது என்பது சிறைப்படுதலுக்கு உள்ளாகும். இந்தச் சிறைப்படுதலும் சுபத்தன்மையுடைய விடுதலை ஆன்ம விடுதலை எனவும் அசுபத் தன்மையுடைய விடுதலை சிறைச்சாலையிலிருந்து விடுபடுவதையே குறிக்கிறது. இப்பூவுலகில் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட அனுமதி மறுக்கப் பட்டு ஓரிடத்தில் அடைக்கப்படுவதையே இங்கு காராகிரகம் என்றும் பந்தனம் என்றும் அழைக்கிறார்கள். பந்தனம் என்பதற்கு கட்டுதல் என்ற பொருளும் உண்டு. ஜோதிட சாஸ்திரத்தின் வழியே ஏன் நிகழ்கிறது என்பதை விரிவாகக் காணலாம்.

காராகிரக தோஷத்தின் கிரக அமைப்புகள் என்ன?

லக்னம் என்பது முதலாம் பாவகமாக வருகிறது. அதற்கு நேர்மாறான பன்னிரெண்டாம் (12ம்) பாவகமாக வருகிறது. இந்த பன்னிரெண்டாம் பாவகமே காராகிரகம் என்னும் சிறைப்படுதலுக்குரிய பாவகமாகும். இந்த பாவகத்தில் செவ்வாய், சனி எட்டாம் (8ம்) பாவகாதிபதி மற்றும் பாதாகாதிபதி மேலும் சாயா கிரகங்களான ராகு, கேதுக்கள் தொடர்பு ஏற்படுவதால். சிறைப்படுதல் என்ற அமைப்பை உருவாக்குகிறது. இதுவே காரா கிரகத்தின் அமைப்பாகும்.

இதுமட்டுமின்றி, பன்னிரெண்டாம் (12ம்) அதிபதியின் திசாவில் எட்டாம் (8ம்) அதிபதியின் புத்தியிலும்; எட்டாம் (8ம்) அதிபதியின் திசாவில் பன்னிரெண்டாம் (12ம்) அதிபதியின் புத்தியிலும் காராகிரக தோஷம் உண்டாக்கும்.
பன்னிரெண்டாம் (12ம்) அதிபதியின் திசாவில் பாதாகாதிபதியின் புத்தியிலும்; பாதாகாதிபதி திசாவில் பன்னிரெண்டாம் (12ம்) அதிபதி புத்தியிலும் காராகிரக தோஷம் ஏற்படலாம்.

புராணத்தில் காராகிரகத்தின் அமைப்பு…

மஹா விஷ்ணு மானிடப் பிறப்பின் ஒன்பதாவது அவதாரமாக ‘ஸ்ரீ கிருஷ்ணராக’ பிறப்பெடுக்கிறார். இப்பிறப்பில் அவரின் அவதாரம் சிறையில் தொடங்குகிறது. அஷ்டமி திதியில் பிறந்து மாயலீலைகளைச் செய்தவன் கிருஷ்ணன். மஹாபாரதத்தில் தூதுவனாக இருந்து, கௌரவர்கள் அனைவரையும் வீழ்ந்து வித்தையை நுணுக்கமாக அறிந்தவன். பல யுகங்கள் கடந்தும் கிருஷணரின் அவதாரம் போன்றுதலுக்குரியது.

கி.பி 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த வடமொழி கவிஞர் சூர்தாஸர் கிருஷ்ணரின் ஜாதக அமைப்பை பாடலில் கூறியுள்ளார். அந்த ஜாதகம் இன்றும் துவாரகையில் உள்ளது. சிறையில் தொடங்குவதன் காரணம் என்னவெனில், பிறக்கும் போது வலிமையான பன்னிரெண்டாம் (12ம்) பாவகம் அசுபத் தன்மையோடு வலிமையாக இருக்கிறது; இருப்பினும் பதினொராம் (11ம்) பாவகமும் வலிமையோடு இருக்கும் காரணத்தினால், இவர் மட்டும் சிறையில் இருந்து விடுபடுகிறார். லக்னாதிபதி ஆறாம் (6ம்) பாவகத்தோடு வலிமையாக சனியுடன் இணைந்து இருப்பதால் இடையர்கள் குலத்தோடு வாழ்ந்தவன். அவன் வாழ்ந்த அவ்விடமே பிருந்தாவனமாக மாறி இருக்கிறது.

முக்தியோகம் வாய்க்கப் பெற்றவன் கிருஷ்ணன். முக்தியோகத்தை பதஞ்சலி முனிவருக்கு உபதேசம் செய்தவன். மனம் எப்படியிருந்தாலும் ஆனந்த லயத்தில் எதிலும் இணைந்தும் இணையாமலும் இருக்கும் வித்தையை அறிந்தவன் கிருஷ்ணன்.

காராகிரக (சிறை) அமைப்பின் மற்றவைகள் என்னென்ன?

*லக்னாதிபதி வலிமையின்றி இருப்பதும்; லக்னாதிபதி அசுப கிரகங்களோடு இணைந்து இருப்பதும் காரா கிரகத்தின் அமைப்பாகும்.

*காராகிரகம் என்பது சிறைவாசம் மட்டுமல்ல மறைந்து வாழ்தலும் காராகிரகத்தின் அமைப்பாகும்.

*புராண காலத்தில் சிறை என்பது ஒன்று கிடையாது. ஆகவே, குற்றம் செய்தவர்களையும்; குற்றம் செய்வதற்கு துணை சென்றவர்களையும்; அரச குடும்பத்திற்கு எதிரானவர்களையும் வனவாசம் செல்லும் தண்டனை கொடுப்பார்கள்.

*நோயின் பாதிப்பிற்கு உட்பட்டு வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமலும்; சுயமாக சிந்திக்க முடியாமலும் இயங்க முடியாமலும் இருக்கக்கூடிய அமைப்பும் சிறைவாசம் போன்றதே.

*சிறையில் பிறந்து சிறைப்பட்டு வாழக்கூடிய அமைப்பானது, பன்னிரெண்டாம் (12ம்) பாவகத்தில் பன்னிரெண்டாம் அதிபதி அசுப கிரகங்களாக இருந்து அசுப கிரகங்களோடு தொடர்பு கொண்டு இருக்கும் பட்சத்தில் ஜனனம் நிகழுமானால் அந்த ஜாதகர் கண்டிப்பாக சிறையில் பிறந்திருக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

*லக்னாதிபதி மறைவதும்; மறைந்த லக்னாதிபதி வலிமையின்றி இருப்பதும் காராகிரகம் (சிறை) ெசல்வதற்கான துணை அமைப்பாகும்.

*வெளிநாடு செல்வதும் வெளிநாட்டில் வாழ்வதும்கூட ஒருவகையான காராகிரகத்தின் அமைப்பாகும். ஏனெனில், மற்றொரு நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு வாழும் அமைப்பை உண்டாக்குகிறது.

*பத்தாம் பாவகத்தில் அசுப கிரகங்கள் அதிகமாக இருக்கும் பொழுது தவறான தொடர்பும் தவறான வழியில் பொருள் ஈட்டுதலும் காராகிரக தோஷத்தினை ஏற்படுத்தும்.

காராகிரக தோஷத்திற்கான பரிகாரங்கள்…

*பன்னிரெண்டாம் (12ம்) பாவகத்தின் திசா காலங்களில் நேர்மையை கடைபிடித்தல் மிகவும் அவசியம். தவறான வழியில் பொருள் ஈட்டும் விஷயத்தை செய்தல் கூடாது.

*பன்னிரெண்டாம் (12ம்) பாவகத்தில் சனி மற்றும் ராகு இருந்தால் கால பைரவரை ராகு காலத்தில் வழிபடுதல் நலம் பயக்கும். அங்கு வழிபட்டு அன்னதானம் செய்தல் நலம் பயக்கும்.

*பன்னிரெண்டாம் (12ம்) பாவகத்தில் சனி மற்றும் கேது இருந்தால் சித்தர் சமாதிகளை தேடிச் சென்று வணங்குதல் நற்பலன்களை வாரி வழங்கும். சித்தர்களுக்கு பிடித்ததை நெய்வேத்தியம் செய்து, அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்குதல் நலம் பயக்கும்.

*பன்னிரெண்டாம் (12ம்) பாவகத்தில் செவ்வாய் மற்றும் சனி தொடர்பு பெற்றிருந்தால், சுப்ரமணியரை செவ்வாய்க் கிழமையும் சனிக்கிழமையும் வழிபட்டு தொடர்ந்து அன்னதானம் செய்தல் தோஷத்தை நிவர்த்தி செய்யும்.

*பன்னிரெண்டாம் (12ம்) பாவகத்தில் சிலருக்கும் முன்று முதல் ஐந்திற்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பின் மிகவும் எச்சரிக்கை தேவை. அசுப கிரகங்கள் இரண்டிற்கும் மேல் தொடர்பு பெறுமாயின் தானங்கள், தர்மங்கள் மட்டுமே உங்களை காப்பாற்றும் என்பதை மறக்க வேண்டாம்.

You may also like

Leave a Comment

four × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi