கன்னியாகுமரி: கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்று(டிச.26) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி தாணுமாலைய சுவாமி கோயில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர்த்திருவிழாவை முன்னிட்டும், ராமநாதபுரம் உத்தரகோசமங்கை கிராமத்தில் ஸ்ரீமங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர்த்திருவிழாவினை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் சனிக்கிழமை(20.01.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் உத்தரகோசமங்கை கிராமத்தில் ஸ்ரீமங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒற்றைக்கல் பச்சை மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களையும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நடராஜருக்கு 32 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.