நாகர்கோவில்: கன்னியாகுமரி -ஹவுரா எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கன்னியாகுமரியிலிருந்து ஹவுராவுக்கு (கொல்கத்தா) திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக வாராந்திர ரயில் சேவை மட்டுமே உள்ளது. இந்த ரயில் 2003-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு இதுவரை வாராந்திர ரயில் சேவையாகவே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சராசரியாக 184 சதவீதம் பயணிகள் பயன்படுத்துகின்றனர் என்ற அளவீட்டுடன் இயங்கி வருகின்றது. தமிழ்நாட்டின் தென்மாவட்ட பகுதிகளில் இருந்து கிழக்கு மாநிலமான ஒடிசா மற்றும் மேற்கு வங்க பகுதிகளுக்கு கூடுதல் ரயில்கள் தேவை, நல்ல வரவேற்பும் உள்ளது. ரயில்வேக்கு இதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கும் என்பதையும் ஆய்வு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தென் மாவட்டத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று திட்டத்தையும் வகுத்து வருகின்றனர். தென்மாவட்டங்களில் இருந்து இந்தியாவில் உள்ள கிழக்கு பகுதி மாநிலங்களுக்கு கூடுதல் ரயில் சேவை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதன்படி தற்போது திருச்சியிலிருந்து ஹவுராவுக்கு வாரம் இருமுறை இயக்கப்பட்டு வரும் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து தினசரி ரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே வைக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து காலையில் புறப்பட்டு முழு தமிழ்நாடு ரயில் நிலையங்களில் பகலில் பயணம் செய்து இரவு சென்னைக்கு சென்றுவிட்டு பின்னர் ஆந்திர மாநிலத்தில் நடு இரவு நேரங்களில் பயணிக்குமாறு கால அட்டவணை அமைத்து இயக்கப்படுகின்றது. இவ்வாறு இயக்குவதால் தமிழ்நாட்டில் சுமார் 16 முதல் 20 மாவட்ட பயணிகள் நேரடியாக இந்த ரயிலில் பயணம் செய்ய முடியும். கன்னியாகுமரி – ஹவுரா தினசரி ரயிலாக இயக்கும் போது தென்மாவட்ட பயணிகள் சென்னைக்கு செல்ல ஒரு தினசரி பகல்நேர ரயில் சேவை கிடைக்கும். இது தென்மாட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை தற்போது இரு வழிபாதை பணிகள் முடிந்து விட்ட காரணத்தால் இந்த பகுதியில் தினசரி ரயில் இயக்குவதில் எந்த ஒரு பிரச்னையும் இருக்கப்போவதில்லை. கன்னியாகுமரி ரயில் நிலையம் தற்போது கூடுதல் நடைமேடைகள் அமைக்கப்பட்டு அடிப்படை கட்டமைப்பு விரிவாக்கம் பணிகள் முடிவு பெற்றுவிட்டன. இந்த ரயிலை பராமரிப்பதற்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிட்லைன்கள் உள்ளன. எனவே கன்னியாகுமரி – ஹவுரா ரயிலை தினசரி ரயிலாக இயக்க ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.