Tuesday, February 27, 2024
Home » மண்புழு உரம் தயாரிப்பு :மகுடம் சூடும் குமரி விவசாயி

மண்புழு உரம் தயாரிப்பு :மகுடம் சூடும் குமரி விவசாயி

by Porselvi

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் கடைக்கோடி மாவட்டமாக விளங்குகிறது குமரி மாவட்டம். மற்ற மாவட்டங்கள் போல இந்த மாவட்டத்திலும் விவசாயம் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் சமவெளி பகுதியுடன் மலைப்பகுதியும் கலந்து இருப்பதால் அதற்கேற்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. நெல், கரும்பு, வாழை, ரப்பர், மிளகு, மலர் வகைகள் என பல்வேறு பெயர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பயிர்களை சாகுபடி செய்யும் பல விவசாயிகள் இயற்கை விவசாய முறைக்கு மாறி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஏற்றாற் போல் இயற்கை உரங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில் சிலர் தாங்களாகவே இயற்கை உரம் தயாரிக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்தவரிசையில் குமரி மாவட்டம், மேக்கா மண்டபம் பூந்தோப்பு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற சமூக நலத்துறை அதிகாரி ஞானதாஸ் மண்புழு உரம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த உரத்தை தனது விளை நிலத்திற்கு பயன்படுத்தி சிறப்பான மகசூல் ஈட்டிவருகிறார். ஒரு மாலைப்பொழுதில் மண்புழு உரம் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஞானதாசை சந்தித்துப் பேசினோம்.

”எனக்கு குமாரபுரம் அருகே உள்ள பெரும்சிலம்பு பகுதியில் சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. நான் சமூகநலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு 2 ஏக்கர் நிலத்தில் பயனுள்ள விவசாயப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என மனதில் தோன்றியது. இதன்படி 25 சென்ட் நிலத்தில் நல்ல மிளகு சாகுபடி செய்துள்ளேன். இதற்கு இயற்கை முறையில் உரம் மற்றும் மருந்துகளை பயன்படுத்தி அதிக மகசூலை பெற்று வருகிறேன். மீதமுள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தில் ரப்பர் , எலுமிச்சை சாகுபடி செய்துள்ளேன். நல்ல மிளகு பயிர்களுக்கு மண்புழு உரம் ஏற்றதாக இருக்கும் . ஆகவே 6 மாதத்திற்கு ஒரு முறை மண்புழு உரம் பயன்படுத்தி வருகிறேன். இந்த உரத்தை தேனி மாவட்டத்தில் இருந்து டெம்போ மூலம் கொண்டு வந்து செடிகளுக்கு பயன்படுத்தி வந்தேன். இதனால் செலவு அதிக அளவு ஆனது. எனவே நாமே மண்புழு உரம் தயாரிக்கலாம் என முடிவு செய்தேன். மாட்டுச சாணத்தை மட்டும் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிக்கலாம் என என் மனதில் தோன்றியது.

எனது நிலம் உள்ள இடம் கிராம பகுதி என்பதால், அதிகமக்கள் மாடுகள் வளர்த்து வருகின்றனர். இதனால் சாணம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். மேலும் மாட்டுசாணத்தில் இயற்கையாகவே செடி, கொடிகளுக்கு தேவையான நல்ல ஊட்டசத்துக்கள் அதிகம் இருக்கும். இதையே மண்புழு உரமாக மாற்றும் போது விவசாய நிலத்திற்கு தேவையான தழைச்சத்து, உயிர்ச்சத்துக்கள் அதிக அளவு கிடைக்கும்.கடந்த 6 மாதத்திற்கு முன்பு நல்லமிளகு பயிர் சாகுபடி செய்துள்ள இடத்தின் அருகே மண்புழு உரம்தயாரிக்கும் வகையில் 4 பெரிய தொட்டிகள் அமைத்தேன். ஒவ்வொரு தொட்டியையும் 2டன் மண்புழு உரம் தயாரிக்கும் அளவிற்கு இந்த தொட்டிகளை தயார் செய்துள்ளேன். தொட்டியின் பாதி அளவு மண் நிரப்பி மீதமுள்ள இடத்தில் சாணம் கொட்டிவிடுவேன். இதில் ஒரு தொட்டிக்கு 5 கிலோ மண்புழுக்கள் என்ற கணக்கில் சாணத்துடன் விட்டுவிடுவேன். தினமும் இருமுறை சாணத்தில் தண்ணீர் ஊற்றுவேன். இதனால் மண்புழுக்களுக்கு குளிர்ச்சியான சீதோஷண நிலை நீடிக்கும். வெப்பம் தாக்குதல் இருந்தால் மண்புழுக்கள் இறந்துவிடும். மண்புழு உரம் தயாரிக்க தேனி மாவட்டத்தில் இருந்து 27 கிலோ மண்புழுக்களை வாங்கி வந்தேன். இந்த புழுக்கள் ஆப்பிரிக்கா நாட்டை பூர்விகமாக கொண்ட யூஜிலஸ் வேஜினியா, ஹனியா பெட்டிடா போன்ற ரக புழுக்கள் ஆகும். சாணத்தில் மண்புழுக்கள் விட்டு 40வது நாளில் மேல் பகுதி மண்போல் ஆகிவிடும். அதை கையில் எடுத்துபார்க்கும் போது உதிரும் தன்மையில் இருக்கும். பின்னர் மண்புழு தனியாகவும், மண்புழு உரம் தனியாகவும் பிரித்து எடுப்பேன். மண்புழு உரத்துடன் அசோஸ்பைரில்லம், பாக்சோ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, மெட்டாரைசியம், சூடோமோனஸ், டிராக்ரோ டெர்மா பெர்டி, சிங் பாக்டீரியா போன்ற இயற்கை உயிர் உரங்களில் இருந்து 5 லிட்டர் எடுத்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு டன் மண்புழு உரத்துடன் கலந்துவிடுவேன்.

இதனை நாம் விளை நிலத்தில் பயன்படுத்தும்போது பயிர்கள் நன்றாக வளர்வதுடன், பயிர்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணில் இருந்து எடுத்துகொடுப்பதுடன் மண்வளத்தை பாதுகாக்கவும் செய்யலாம். ரசாயன உரம் பயன்படுத்தும்போது மண்ணில் இருக்கும் அனைத்து சத்துக்களை எடுத்து பயிர்களுக்கு நேரடியாக கொடுப்பதால், மண்வளம் விரைவில் கெட்டுவிடும். மாட்டுச்சாண உரத்தை விளைநிலத்தில் பயன்படுத்தும்போது அதிக அளவு களைகள் வளரும். ஆனால் மண்புழு உரங்களை பயன்படுத்தும் போது குறைவாகவே களைகள் வளரும். என்னுடைய தோட்டத்திற்கு போக மீதமுள்ள மண்புழு உரத்தை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறேன். ஒரு கிலோ மண்புழு உரம் ரூ.12.50க்கு விற்பனை செய்து வருகிறேன். ஒரு டன் உரம் விற்பனை செய்யும்போது அனைத்து செலவுகள் போக லாபம் ரூ.2 ஆயிரம் கிடைக்கும். 10 நாட்களுக்கு ஒரு முறை ஒரு டன் மண்புழு உரம் கிடைத்து வருகிறது. ஒரு வருடத்திற்கு சராசரியாக 30 டன் மண்புழு உரம் கிடைக்கும். இதன்மூலம் வருமானமாக ரூ.37 ஆயிரத்து 500 கிடைக்கிறது. இதில் செலவுகள் ரூ.5 ஆயிரத்து 500 போக ரூ.32 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. நாட்கள் செல்ல செல்ல லாபம் அதிகமாகக் கிடைக்கும். ஆனால் லாபத்தை மையப்படுத்தி நான் மண்புழு உரத்தை தயாரிக்கவில்லை. அனைத்து விவசாயிகளும் மண்வளத்தை காப்பாற்ற மண்புழு உரம், இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் செய்கிறேன். 6 மாத காலத்தில் 60 கிலோ மண்புழு விற்பனை செய்துள்ளேன். ஒரு கிலோ மண்புழு ரூ.400க்கும் விற்பனை செய்கிறேன். ஒரு வருடத்திற்கு 120 கிலோ மண்புழுக்களை விற்பனை செய்கிறேன். இதன்மூலம் வருடத்திற்கு ரூ.48 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் செலவுகள் ரூ.5 ஆயிரம் போக வருடத்திற்கு ரூ.43 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. இதில் மண்புழு உரம் விற்பனை செய்யும் தகவல் பல விவசாயிகள் மத்தியில் சென்றடைந்துள்ளது. மண்புழு உமிழ்நீரில் இருந்து அக்சிலின், ஜெபரிலின் என்ற அமிலம் சுரக்கிறது. இந்த அமிலம் சாணத்துடன் சேருகிறது. இந்த உரத்தை விவசாய நிலத்தில் போடும்போது பயிர்கள் நல்லவளர்ச்சி பெறுவதுடன் நல்ல மகசூலும் கிடைக்கும். இதனை அறிந்த பலர் நேரடியாக வந்து உரங்களை வாங்கிச்செல்கின்றனர். மேலும் அதிக விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறி மண்வளத்தை பாதுகாப்பதுடன், சத்தான விளை பயிர்களை உற்பத்தி செய்து உண்ணவேண்டும் என்பதே எனது நோக்கம் என்கிறார்.
தொடர்புக்கு:
ஞானதாஸ்: 81225 58960

மீன் அமினோ அமிலம் தயாரிப்பு

மண்புழு உரம் மட்டுமின்றி மீன் அமினோ அமிலம் தயாரித்து வருகின்றேன். மற்றவர்கள் மீன் அமினோ அமிலம் தயாரிக்க மீன், மற்றும் வெல்லம் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். ஆனால் நான் மீன் அமினோ அமிலம் தயாரிக்க 32 கிலோ மீன், 35 கிலோ நாட்டு சர்க்கரை, 7 கிலோ வாழைப்பழம், 5 கிலோ பப்பாளி பழம், 5 கிலோ பேரீச்சம்பழம், 1 கிலோ அமினோ பவுடர்(கணவாய் மீனில் உள்ள நாக்கில் இருந்து தயாரிக்கப்படும் பவுடர்) 2 கிலோ சப்போட்டா, 2 கிலோ முருங்கை இலையுடன் பூ ஆகியவற்றை ஒரு பெரிய பேரலில் போட்டு காற்றுபோகாத வகையில் மூடிவிடுவேன். 20வது நாளில் இந்த காலவையில் இருந்து 40 லிட்டர் மீன் அமினோ அமிலம் கிடைக்கும். ஒரு கிலோ மீன் அமினோ அமிலம் ரூ.200க்கு விற்பனை செய்கிறேன். ரூ.200க்கு விற்பனை செய்யும்போது எந்தவித லாபமும் கிடைக்காது. ரூ.300க்கு விற்பனை செய்தால்தான் லாபம் கிடைக்கும். லாபம் நோக்கம் இல்லாமல் விற்பனை செய்து வருகிறேன். 40 லிட்டர் மீன்அமினோ அமிலத்தில் 25 லிட்டர் விற்பனை ஆனவுடன் அடுத்து உற்பத்தியை தொடங்குவேன்.

You may also like

Leave a Comment

1 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi