சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக அரசு வழங்கிய கொரோனா நிவாரணத்தை பெற்றபோது மக்களின் எண்ணங்களை பிரதிபலித்தது வேலம்மாள் பட்டி புன்னகை. மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த வேலம்மாள் பாட்டி தந்து புன்னகை வழியாக என்றும் நம்மிடம் நிலைத்திருப்பார். வேலம்மாள் பாட்டி மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு, உறவினர்களுக்கும் முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழாலுங்கடி பகுதி சேர்ந்த 92 வயதான வேலம்மாள் பாட்டி காலமானார். கொரோனா பேரிடர் காலத்தின்போது, மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு இலவசமாக நிவாரண தொகை வழங்கியது. அந்த நேரத்தில் குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில், தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.2000 நிவாரண தொகை பெற்றபோது, கையில் ரூ.2,000 பணத்துடன் தனது பொக்கை வாய் சிரிப்புடன் போஸ் கொடுத்தவர் 90 வயதான வேலம்மாள் பாட்டி. அந்த புகைப்படத்தின் மூலம் வேலம்மாள் பிரபலமானார்.
வேலம்மாள் பாட்டியின் புன்னகை புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி தொடர்ந்து அரசு விளம்பரங்களில் இடம் பிடித்து வந்தது. வேலம்மாள் பாட்டியின் புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் ‘ஏழைத்தாயின் சிரிப்பே நம் ஆட்சியின் சிறப்பு’ என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகர்கோவில் சென்றபோது வேலம்மாள் பாட்டியை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, வேலம்மாள் பாட்டி, குடியிருக்க வீடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதல்வர் அவருக்கு வீடு ஒதுக்கி அதற்கான ஆணை அவரிடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.