கன்னியாகுமரி : கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபமும், மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி பாலம் திறக்கப்பட்ட பிறகு கன்னியாகுமரிக்கு வரும்சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளது. இதனால் கூடுதல் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன் ஆகிய 2 படகுகள் தவிர தாமிரபரணி திருவள்ளுவர் ஆகிய 2 சொகுசு படகுகளும், விவேகானந்தா கேந்திராவுக்கு சொந்தமான ஏக்நாத் என்ற படகும் என 5 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கோடை விடு முறை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுவதால் படகு போக்குவரத்து நேரமும் கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 1 மணி நேரமும் மாலை 1 மணி நேரமும் கூடுதலாக இந்த படகுபோக்குவரத்து நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் எளிதாக பாலத்தை படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
இந்தநிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அழகுப்படுத்தும் பணி நடந்து வருகிறது.கண்ணாடி பாலத்தில் 2 யானை சிலைகள் மற்றும் மீனவர்கள் படகில் சென்று வலை விரித்து மீன் பிடிப்பது போன்ற தத்ரூப காட்சிகள் அடங்கிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் கண்ணாடி பாலத்தின் நுழைவு வாயிலில் இருபுறமும் அலங்கார தூண்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக இந்த கண்ணாடி பாலத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.