நாகர்கோவில்: திமுக இளைஞரணி மாநாடு விளக்க பைக் பிரசார பேரணியை கன்னியாகுமரியில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடக்கிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி திமுக இளைஞர் அணி பைக் பிரசார பேரணி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இன்று காலை தொடங்கியது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பேரணியை தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோதங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதயநிதி ஸ்டாலினும் பைக் பேரணியில் சிறிது தூரம் கலந்து கொண்டார். இந்த பேரணியில் 188 பைக்குகளில் இளைஞர் அணியினர் பங்கேற்கின்றனர்.
இன்று முதல் வரும் 27ம் தேதி வரை 13 நாட்களில் 8 ஆயிரத்து 647 கி.மீ தூரத்தை கடக்கும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 504 பிரசார மையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ெஹல்மெட் அணிந்து, கறுப்பு-சிவப்பு நிற சீருடை அணிந்த இளைஞர் அணியினர் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பைக்கில் கறுப்பு-சிவப்பு நிற கொடிகளை கட்டியிருந்தனர். இந்த பேரணி தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலங்களிலும் செல்கிறது. 2வது இளைஞர் அணி மாநாட்டில் இணைவோம், மாநில உரிமை மீட்போம் என்ற வாசகம் தொடக்கவிழா நடைபெற்ற இடத்தில் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்தது. உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நவம்பர் 27ம் தேதி சென்னையில், பயணம் நிறைவு பெறுகிறது.