கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக குளங்களில் தாமரை பூ பறிக்க முடியாததால் தோவாளை மலர் சந்தையில் அதன் விலை 15 மடங்கு அதிகரித்து இருக்கிறது. குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. அதைபோல் நூற்றுக்கணக்கான தாமரை பூ குளங்களும் நிரம்பியுள்ளதால் பூக்கள் பறிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 100 பூக்கள் கொண்ட ஒரு கட்டு தாமரை பூ கடந்த வாரம் ரூ.100-க்கு விற்பனை செய்த நிலையில் இன்று ரூ.1,500-யாக விலை உயர்ந்துள்ளது.
இதுபோன்று சில்லறை விலைக்கு ஒரு தாமரை பூ ரூ.15 முதல் ரூ.18 வரை விற்பனை செய்யப்படுகிறது. குமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிற்றாறு அணைகளில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று வினாடிக்கு 1000 கனஅடியாக இருந்த நீர் இன்று 200 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறையாததால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.