Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கன்னியாகுமரியில் இன்று முதல் சுற்றுலா படகு கட்டணம் உயர்வு: பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுவதாகப் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் ஏப்ரல் மற்றும் மே மாதம் கோடைக்கால சீசனாக கருதப்படுகிறது. இந்த சீசனில் தற்போது குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவையை நடத்தி வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுற்றுலா படகு சேவை கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சாதாரணக் கட்டணம் ரூ.75ல் இருந்து ரூ.100ஆகவும், மாணவர் கட்டணம் ரூ.30ல் இருந்து ரூ.40ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.300 சிறப்புக் கட்டணத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.