கான்பூர்: கான்பூர் அருகே அதிகாலையில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த விபத்தில் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை. தண்டவாளத்தில் இருந்த மர்ம பொருள் மீது ரயில் மோதியதால் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. உபியின் வாரணாசியில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் நோக்கி புறப்பட்ட சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 2.35 மணி அளவில் கான்பூர் அருகே பீம்சென் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டன. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு எழுந்தனர்.
சம்பவத்தின் போது ரயில் மிகவும் மெதுவாக சென்று கொண்டிருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக ரயில்வே போலீசார் விரைந்து வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் களமிறங்கினர். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பஸ் உள்ளிட்ட மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 3 ரயில்கள் திருப்பி விடப்பட்டன.
* சதிச்செயலா?
இந்த விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் கிடந்த மர்ம பொருள் மீது மோதியதால் தடம் புரண்டுள்ளது. தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக உளவுத்துறை மற்றும் உபி போலீசார் விசாரிக்கின்றனர்’’ என்றார். தண்டவாளத்தில் கிடந்த பாறாங்கல் மீது மோதியதால் ரயில் தடம் புரண்டதாக லோகோ பைலட் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இதே வழியாக அதிகாலை 1.20 மணி அளவில் பாட்னா-இந்தூர் ரயில் எந்த சிக்கலும் இன்றி பயணித்துள்ளது. இதனால் இது சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் செய்த சதிச் செயலா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.