ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, கன்னிகைப்பேர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள கூட்டுறவு சங்கம் அருகில் முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சி.எச்.சேகர் நிதியில் ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. இதில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ரேஷன் கடையின் பின்புறம் உள்ள சுவர் சேதமடைந்து விட்டது. இதனால், ரேஷன் பொருட்கள் வாங்குபவர்கள் அச்சத்துடன் வாங்கி வந்தனர். இதனையடுத்து, ரேஷன் கடை மூடப்பட்டது. மேலும், இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க அருகில் உள்ள சின்ன காலணி பகுதி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வருகிறார்கள்.
இதனால், பயன்பாடில்லாமல் மூடியே கிடக்கும் ரேஷன் கடை அப்பகுதியில் உள்ள மாடுகள் இரவு நேரத்தில் தங்கவைக்கப்பட்டு மாட்டு தொழுவமாக மாறியுள்ளது. மேலும், புதர்கள் மண்டியும் காணப்படுகிறது. எனவே, ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.