Sunday, June 15, 2025
Home ஆன்மிகம் தோஷங்களை நீக்கும் கன்னிகா பூஜை

தோஷங்களை நீக்கும் கன்னிகா பூஜை

by Porselvi

ஒளிமிக்க கன்னியாகுமரி பகவதி அன்னையின் மூக்குத்தி யோக சக்தியின் வெளிப்பாடு என்பதால், பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது. பாரத தேசத்தைப் பரதன் ஒன்பது பிரிவுகளாக்கி இந்திரன், சுசேரு, தம்பீரபருணன், கபத்திமா, நாகன், சந்திரன், கந்தருவன், வருணன் உள்ளிட்ட எட்டு மகன்களிடமும், குமரி என்ற ஒரு மகளிடமும் அளித்தான். குமரிக்கு தென்பாகத்தை ஆட்சி செய்ய ஒப்படைத்தனர். இத்தலத்தில், உலக மாதா அம்சமான பகவதிதாய் புட்பகாசி தவம் செய்திருந்தாள். மூன்று யுகங்களாகப் பூஜை செய்வதைக் கண்டு மகிழ்ந்த ஈஸ்வரன், “வேண்டிய வரம் கேள்” என்றார். அப்போது பகவதி அம்மன்;“உலக அழிவு காலத்தில் உம்முடன் இணைந்து மகிழ்ந்திருக்க வேண்டும்’’ என்று வரம் கேட்டாள். “அவ்வாறே செய்வோம் அதுவரை தென்கடற்கரையில் சப்தமாதர் தோழிகளாயிருக்க இலுப்பைப் பூமாலை ஏற்று இடக்கையைத் தொடைமேல் வைத்துத் தவம் செய். கன்னிகா சேத்திரம், ஞானவாசம், தவத்தலம் என்று இத்தலம் அழைக்கப்படும். நாம் பிரமச்சாரியாய் வந்திருப்போம்” என்றார்.

சிவபெருமானை திருமணம் புரிய விரும்பி கன்னியாகுமரியில் பகவதி அம்மன் தவமிருந்தாள். ஆனால், சிவன் வராமல் போகவே கோபத்தில் இருந்த பகவதி தேவியை திருமணம் செய்து கொள்ளுமாறு பாணாசுரன் வற்புறுத்தினான். இதனால் மேலும் கோபமாகி அசுரனை அழித்தாள் அன்னை பகவதி.தேவர்களின் வேண்டுதலால் சினம் தணிந்து, தனது கோப சக்தியை எல்லாம் ஒரு ஒற்றைக்கல் மூக்குத்தியில் இறக்கி அன்னை பகவதி சாந்தமானாள். அவள் குமரியாகவே அங்கு வீற்றிருந்ததால் ‘கன்னியாகுமரி’ என்றே பெயர் பெற்றாள். இந்த மூக்குத்தியின் ஒளியை கலங்கரை விளக்க ஒளி என்று எண்ணி வந்த கப்பல்கள், கரையில் மோதி விபத்துக்குள்ளானதாம்.அதனாலேயே ஆலயத்தின் கடற்கரை நோக்கிய முன் கோபுரவாசல் மூடப்பட்டு, வடக்குப்புறமாக வாசல் வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். ஒளிமிக்க அன்னையின் மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு என்பதால், பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது. இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் பகவதி தாய் நின்று நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறாள்.‘நீலத்திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை’ என்று பாரதி போற்றியவாறு குமரித் தெய்வத்தின் கோயில் கடலோரமாக அமைந்து காட்சி தருகின்றது. பெரிய நிலப்பரப்பில் நான்குபுறமும் மதில் சுவர்கள் சூழ, அந்த கோயில் அமைந்துள்ளது.

பகவதி அம்மனின் கருவறை உள்மண்டபத்திலே அமைந்திருக்கின்றது. இளங்காலைக் கதிரவனுக்கு ஆசி கூறி அருள்வது போன்று குமரித் தெய்வம் கிழக்கு திசை நோக்கிய வண்ணம் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றாள். அவளது மணிமுடியிலே பிறைமதி காட்சி தருகின்றது. அவள் அணிந்திருக்கும் வைர மூக்குத்தி, கண்களைப் பறிக்கும் பிரகாசமுடையதாகத் திகழ்கிறது. பகவதி தாய் தனது ஒரு கரத்திலே இலுப்பைப்பூ மாலையைத் தரித்து, மற்றொரு கரத்தைத் துடைமீது அமர்த்தி தவக்கோலத்திலே காட்சியளிக்கிறாள். பகவதித் தாயின் மூக்குத்தி மின்னும் முகப்பொலிவும், கருணை பொழிந்திடும் இரு கண்களும், புருவங்களும், பரந்த நெற்றியும், அதில் ஒளி வீசித் திகழும் மாணிக்கத் திலகமும், இதழ்களின் கோடியில் தெரிந்திடும் புன்முறுவலும், நிமிர்ந்த தோற்றப் பொலிவும் காண்போர்க்கு ஒரு பேரின்ப விருந்தாக அமையும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.இக்கோயிலின் உள் பிராகாரத்துத் தென்மேற்குக் கோடியில் விநாயகர் சந்நதி உள்ளது. அங்குள்ள மணி மண்டபம் ஆறு தூண்களைக் கொண்டதாகும். இம்மண்டபத்தின் முன்பாக சபா மண்டபம் அமைந்துள்ளது. உள்பிராகாரத்தைவிட அகன்ற இடைவெளியுடன் கூடியதாக வெளிப்பிராகாரம் அமைந்துள்ளது. நாள்தோறும் அன்னை பகவதி இப்பிராகாரத்தில் பவனி வருகிறாள். கன்னியாகுமரி பகவதி அம்மனை கன்னிகா பூஜை அல்லது சுயம்வர பூஜை செய்து மனம் உருக வழிபட்டால், எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் விலகி உடனே திருமணம் கை கூடிவிடும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi