சென்னை: சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் இவரது மனைவி நிஷாந்தி. திருமணமாகி இவர்களுக்கு 12 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நிஷாந்தி வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் பெண் ஒருவர் ஒரு வாரமாக சென்று தாய், சேய்க்கு ஊட்டச்சத்து பொருட்களை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
நேற்று நண்பகல் நிஷாந்தி வீட்டிற்கு சென்றவர் தாயுடன் குழந்தையையும் ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். தியாகராய நகரில் உள்ள ஒரு இடத்தில் தாயிடமிருந்து குழந்தையை வாங்கியவர் ஊட்டசத்து பொருட்களை பெற்று தருவதாக கூறியுள்ளார். வெகு நேரம் ஆன பின்னரும் அவர் வராததால் அதிர்ச்சி அடைந்த நிஷாந்தி அந்த பகுதியில் அந்த பெண்ணையும், குழந்தையையும் தேடி உள்ளார்.
ஆனால் அந்த பெண்ணை கண்டு பிடிக்க முடியாததால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை கண்ணகி நகர் போலீசாருக்கு மாம்பலம் போலீசார் அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து கண்ணகிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷாந்தியிடம் ஆட்டோவில் ஏறிய இடம், மர்ம பெண் குறித்து தகவல்களை சேகரித்து குழந்தையை மீட்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை உண்மையாகவே கடத்தப்பட்டதா? அல்லது பணத்திற்காக விற்கப்பட்டதா? உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.