சென்னை: சமீபத்தில் நடந்த ‘தக் லைஃப்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னட மொழி உருவானது என்று பேசினார். இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் சில கன்னட அமைப்புகள் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிடில் ‘தக் லைஃப்’ படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், கேரளாவில் நடந்த ‘தக் லைஃப்’ பட நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து கூறியது: என்னையும், ‘தக் லைஃப்’ படத்தையும், மக்கள் பார்த்துக்கொள்வார்கள். மொழியை பற்றி பேசும் அளவிற்கு நான் உள்பட எந்தவொரு அரசியல்வாதிக்கும் போதிய கல்வி இல்லை. இதுபோன்ற ஆழமான கருத்துகளை வரலாற்று ஆய்வாளர்கள், தொல்பொருள் ஆய்வாளரிடம் விட்டுவிட வேண்டும். சிவராஜ் குமாரின் தந்தை ராஜ்குமார் எனக்கும் அண்ணன் போன்றவர்.
என் தரப்பில் இருந்து பார்க்கும்போது நான் கூறியது சரிதான், எதிர்தரப்பில் இருந்து பார்க்கும்போது அது தவறாக இருக்கலாம். இதில் மூன்றாவதாக ஒரு கோணம் இருக்கிறது. அவர்கள் தரப்பில் இருந்து பார்த்தால் இரு பக்கமும் சரி, வடக்கில் இருந்து வந்த ஒரு மொழியை சார்ந்து இருக்க போகிறீர்களா அல்லது குடும்பத்தின் பக்கம் இருக்க போகிறீர்களா என நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என மொழி ஆய்வாளர்கள் சொல்வார்கள்.
கர்நாடகத்தில் எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். இது பதில் இல்லை, இது விளக்கம். அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது. இவ்வாறு கமல்ஹாசன் பேசியுள்ளார். இதன்மூலம்தான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.