மதுரை: கன்னட மொழி குறித்து கமல் பேசியது உண்மை, சத்தியம் என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பை முன்கூட்டியே கணிக்க முடியாது. நீதிபதி வழங்கக்கூடிய தீர்ப்பு என்பது பாதிக்கப்பட்ட மாணவிக்கான நீதியாக இருக்க வேண்டும். வெறும் தீர்ப்பாக இருக்கக் கூடாது.
ஜூன் 22ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டின் போது எனக்கு வேறு போராட்டம் உள்ளது. ஆடு, மாடுகளின் மாநாடு வைத்திருக்கிறேன். அதில் கலந்து கொள்வேன். கன்னட மொழி குறித்து கமல் பேசியது உண்மையிலும் உண்மை. சத்தியத்திலும் சத்தியம். தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாமே தமிழில் இருந்து வந்த மொழிகள் தான். உண்மையை உணராத கூட்டமாக, தன் வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். அதைப் பற்றி பேசி பலனில்லை.
1,800 ஆண்டுகளுக்கு முன்பு தான் தமிழில் இருந்து சமஸ்கிருதம் கலந்து கலந்து பேசியதால், பிளந்து வந்த முதல் மொழி கன்னடம். அதன்பிறகு 1,600ல் தெலுங்கு வருகிறது. 15ம் நூற்றாண்டில் தான் மலையாளம் வருகிறது. அதன்பிறகு துளு வந்தது. தமிழில் இருந்து பிரிந்து வந்த மொழிகள் தான் இவை. வரலாறு தெரிந்தால் அதை எதிர்க்க மாட்டார்கள். தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வறிஞர்களுக்கு கமல் ெசான்னது சரி என்பது தெரியும். கமல் சொன்னது உண்மை. இவ்வாறு கூறினார்.
* பிரச்னையே அவர்கள்தான்
சீமான் கூறுகையில், ‘பாஜவுடன் கூட்டணி வைத்திருப்பதால் நடிகர் பவன் கல்யாணை தமிழ்நாட்டிற்கு அந்த கட்சியினர் அழைத்திருக்கலாம். இது குறித்த நான் பேச வேண்டியது இல்லை. தமிழ்நாட்டில் நிறைய பிரச்னைகள் இருக்கிறது. அதை ஜனசேனா தீர்த்து வைக்கும் என பவன் கல்யாண் கூறியுள்ளார். அவர் என்ன பிரச்னையை தீர்த்து வைக்கப் போகிறார்? பிரச்னையே அவர்கள் தான்’ என்றார்.