திருவனந்தபுரம்: தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ‘‘உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது.
அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்” என்று தெரிவித்தார். இந்நிலையில், கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்வில் பேசிய கமல்ஹாசன்; தமிழிலிருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். அவர்கள் இந்த விஷயத்தில் குழப்பத்தில் உள்ளனர்.
நான் பேசியவை அனைத்தும் அன்பு மிகுதியால் வந்தவை. மொழி குறித்த வரலாறுகளை வரலாற்று அறிஞர்கள் எனக்கு கற்பித்துள்ளனர். நான் சொன்ன கருத்தை எனது பக்கம் இருந்து பார்த்தால் சரியாக தோன்றும்; நான் சொன்னதை உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தால் அது தவறாகத்தான் தோன்றும். மொழி குறித்து அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்லியல் துறையினர்தான் விவாதிக்க முடியும். அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது. மொழி குறித்த பேச்சை அரசியலாக்க வேண்டாம். கர்நாடகத்தில் இருந்து விமர்சிப்பவர்களையும் எனது குடும்பத்தினர்களாகவே கருதுகிறேன் என்று கூறினார்.