சென்னை: கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் சொன்னது அரசியல் கூற்று அல்ல என விசிக எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது, “ கன்னட மொழிக்கும் தமிழ் மொழிக்குமான உறவைப்பற்றி கமல்ஹாசன் கூறிய கருத்தை முன்வைத்து கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களால் எழுப்பப்பட்டுள்ள சர்ச்சை இதன் அண்மைக்காலச் சான்றாகும். சமஸ்கிருத மேலாதிக்கத்தை எதிர்க்கும் போராட்டத்தில் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து நிற்கவேண்டிய தேவை உள்ளது.
அந்த ஒற்றுமையை அரசியல் தளத்தில் கட்டியெழுப்புவதற்குத் திராவிட மொழிகளுக்கிடையிலான உறவை மொழியியல் அடிப்படையில் வலுவாக எடுத்துச் சொல்வது இன்றியமையாததாகும். மனோன்மணியம் சுந்தரனாரின் பாடல் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிவிக்கப்பட்டபோது அதிலிருந்த “கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதித்தெழுந்தே” என்ற வரி நீக்கப்பட்டது. அதற்கான காரணத்தை கலைஞரே ஒரு கூட்டத்தில் விளக்கியிருக்கிறார்: “ கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் துளுவும் (தமிழிலிருந்து உருவானவை ) என்பதெல்லாம் மொழி ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாக இருக்கலாம்.
கன்னடக்காரர்களால் ஒத்துக்கொள்ள முடியுமா? தெலுங்குக்காரர்கள் ஒத்துக்கொள்வார்களா? நாம் இங்கே தமிழை வாழ்த்தப் போய் தமிழர்களுக்கும் கர்நாடக மக்களுக்கும் இடையே கசப்பும் பூசலும் வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த வரி விடப்பட்டது என அவர் கூறியிருக்கிறார்.ஒரு மொழியியல் உண்மையை வலியுறுத்துவது அரசியல் முரண்பாட்டுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வே கலைஞரின் பேச்சில் வெளிப்பட்டுள்ளது. அது ஏற்கத் தக்கதுதான் என்றாலும் மொழியியல் உண்மையை மேலும் ஆதாரபூர்வமாக ஆய்வுத் தளத்தில் நிறுவும் கடமையை அரசியலுக்காக நாம் புறக்கணிக்கக்கூடாது இவ்வாறு தெரிவித்துள்ளார்.