தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்று எதன் அடிப்படையில் பேசினீர்கள்: கமலுக்கு கர்நாடக ஐகோர்ட் கேள்வி
கர்நாடகா: தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்று எதன் அடிப்படையில் பேசினீர்கள் என கமலுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நடிகர் கமல்ஹாசன், முன்னணி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ‘தக் லைப்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கூறினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகத்தில் கடும் கண்டனம் எழுந்தது. மேலும் கன்னட அமைப்பினர், எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கமல்ஹாசனை கண்டித்தும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
கன்னடமொழி பற்றி பேசிய கமல்ஹாசனின் ‘தக் லைப்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகளிடமிருந்து வலியுறுத்தல்கள் வலுக்க, அதுதொடர்பாக கடந்த வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்திய கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கமல்ஹாசன் மே 30-ம் தேதிக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவில்லை எனில், அவரது தக் லைப் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தது.ஆனால் கமல்ஹாசன் தான் தவறாக எதுவும் கூறவில்லை என்றும், அன்பு மன்னிப்பு கேட்காது என்றும் கூறியுள்ளார். தவறு செய்யாமல் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்நிலையில் தக் லைப் திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் பிரதிநிதி, கன்னட மக்களின் மனதை காயப்படுத்தியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை.
இந்த நிலையில், தக் லைஃப் படத்தை புறக்கணிக்க கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்துள்ள நிலையில், தக் லைப் படம் வெளியிட பாதுகாப்பு கோரி கர்நாடகா ஐகோர்ட்டில் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா, கமல்ஹாசன் என்ன வரலாற்று ஆய்வறிஞரா? மொழியியல் வல்லுநரா? தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?.பிரச்னைக்கு காரணமே கமல்ஹாசனின் பேச்சுதான். மன்னிப்பு கேட்க முடியாது என்று வேறு கூறியுள்ளார்.கர்நாடக மக்களின் உணர்வுகளை கமல் புண்படுத்தியுள்ளார்.வணிக ஆதாயம் மட்டும் வேண்டும் என இப்போது THUG LIFE படத்திற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளீர்கள். ஒரு மன்னிப்பு கேட்டாலே பிரச்னை தீர்ந்துவிடும்.மன்னிப்பு கேட்க முடியாது.. ஆனால் உங்கள் படம் மட்டும் கர்நாடகத்தில் ஓட வேண்டுமா? மன்னிப்பு கேளுங்கள் அப்போதுதான் இங்கிருந்து சில கோடிகளை சம்பாதிக்க முடியும்.2.30 மணிக்குள் ஒரு முடிவை கமல் தரப்பு கூற வேண்டும். பிறகு என்னுடைய தீர்ப்பை அறிவிக்கிறேன் என தெரிவித்தார்.


