ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் தூய்மை பணியாளர் நல வாரியத்தின் தலைவராக டாக்டர் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி அவர்களையும் மற்றும் பழங்குடியினர் நல வாரியத்தின் தலைவராக திருமதி கா. கனிமொழி அவர்களையும் நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூய்மை பணியாளர் நல வாரியம் மற்றும் பழங்குடியினர் நல வாரியத்தின் கீழ் ஆயிரக்கணக்கான நபர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, சமூக பொருளாதார மேம்பாட்டிற்கென மருத்துவ உதவிகள், கல்வி உதவிகள், ஈமச் சடங்கு நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2.ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் தலைமையில், ஆய்வுக் கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு, மேற்காணும் வாரியங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 3. மேற்காணும் இரண்டு நல வாரியங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களைச் சீரான இடைவெளிகளில் ஆய்வு செய்து, திட்டங்களானது நல வாரிய உறுப்பினர்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்திடவும், திட்டங்கள் குறித்து அவ்வப்போது கள ஆய்வு செய்திட ஏதுவாகவும், தற்போது தூய்மை பணியாளர் நல வாரியத்திற்கு டாக்டர் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி அவர்களைத் தலைவராகவும் மற்றும் பழங்குடியினர் நல வாரியத்திற்கு திருமதி. கா.கனிமொழி அவர்களைத் தலைவராகவும், நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், புதிதாக நியமனம் செய்யப்பட்ட தலைவர்களின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.