சென்னை: சொந்த மாநில நலன்களை கைவிட்டு, தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக டெல்லி எஜமானர்களுக்கு பணிந்து நடப்பவர்கள் எங்களுக்கு போதித்திட எந்த உரிமையும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமிக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கனிமொழி எம்.பி எக்ஸ்தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழக மக்கள் உங்கள் துரோகத்ைத ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தங்கள் சொந்த மாநில நலன்களை கைவிட்டு, தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக டெல்லி எஜமானர்களுக்கு பணிந்து நடப்பவர்கள் எங்களுக்கு போதித்திட எந்த உரிமையும் இல்லை.
தமிழ்நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை நமது விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களை அழிப்பவர்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள். அச்சுறுத்தல் நம்முடைய வீட்டு வாசலில் நிற்கிறது. உங்கள் டெல்லி எஜமானர்களின் பொய்கள் தமிழ்நாட்டில் எடுபடாது என்று அவர்களிடம் சொல்லுங்கள். எழுதப்பட்ட, தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் தீர்வைத் தவிர வேறு எதையும் நாங்கள் விரும்பவில்லை. அரசியலமைப்பு சட்ட உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை நாங்கள் அமைதியாக மாட்டோம், உரத்த குரல் எழுப்புவோம். நீங்கள் உங்களையே விற்றுவிட்டீர்கள், நாங்கள் அப்படி இல்லை. இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.