சென்னை: தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட மூன்று திரைப்படங்களின் இந்தி டப்பிங் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் இருந்து 6 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு சென்னையைச் சேர்ந்த பியூயல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் வாங்கியிருந்தது.
இதில் 2 படங்கள் தயாரிக்கப்படாததால் 5 கோடி ரூபாயை பியூயல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு திருப்பி செலுத்திய நிலையில், மீதம் உள்ள ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை. இந்த தொகையை வட்டியுடன் சேர்த்து 11 கோடி ரூபாயை திருப்பி வழங்காமல் கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பியூயல் டெக்னாலஜிஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. பியூயல் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய அசல் தொகையான ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் பணத்தை டெபாசிட் செய்யாமல் படத்தை வெளியிடக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக சொத்தாட்சியரிடம் ரூ.20 கோடியை டெபாசிட் செய்யாமல் படத்தை வெளியிடக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கிலும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் கங்குவா திரைப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் கங்குவா படம் தொடர்பான வழக்கில் ரூ.1 கோடி பதிவாளர் பெயரில் செலுத்தப்பட்டது. சென்னை ஐகோர்ட் பதிவாளர் வங்கிக் கணக்கில் ரூ.1.60 கோடியை ஸ்டூடியோ கிரீன் செலுத்தியது. சூர்யாவின் கங்குவா திரைப்படம் தொடர்பான வழக்கில் முழு பணமும் செலுத்தப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே அறிவித்தபடி கங்குவா திரைப்படம் நாளை(நவ.14) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கங்குவா படத்துக்கு சிறப்புக் காட்சிகளை திரையிட தயாரிப்பு நிறுவனம் அரசை கோரியிருந்தது. இதையடுத்து, ‘கங்குவா’ திரைப்படம் வெளியாகும் நாளான வரும் நவ.14ம் தேதியன்று, காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.